Saturday, March 17, 2012

அமெரிக்கா: ஈழத் தமிழன் மீது காட்டுவது இரக்கமா? தெற்காசியாவில் மேலாதிக்க தொடக்கமா?


ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.சபையின் 19ஆம் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத்தொடரில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன? அமெரிக்கா ஈழத் தமிழன் மீது ஏன் இரக்கம் காட்டுகிறது?
அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன?
ஈழத் தமிழன் மீது இந்தியாவின் நிலை என்ன? 


அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன? 

தென் கிழக்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை முழுவீச்சில் காட்டி வருகிறது.அடுத்து தனது கவனத்தை மேற்குப்பகுதியில் (தெற்கு ஆசியா) திருப்பியுள்ளது.ஆனால் உலக வல்லரசு அமெரிக்காவிற்கு இது பிடிக்கவில்லை.ஏனென்றால் தற்போதைய சீனாவின் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சக்கூடும்.மேலும் தனது ராணுவ பலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.சீனாவின் தற்போதைய நிலை தனது உலக ஆட்சிக்கு கேடு விளைவிக்குமோ? என்ற அச்சம் வேறு அமெரிக்காவுக்கு.

அமெரிக்கா,ஐரோப்பா கண்டங்களில் தனது நட்பு நாடுகளுடன் தனது ஆதிக்கத்தை நிறுத்தி கொண்ட அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்கா,ஆசியா கண்டங்களில் அவ்வளவு எளிதாக நிறுத்தி கொள்ள முடியவில்லை.முதலில் எண்ணெய் வளம் மிக்க ஈராக்,ஆப்கானிஸ்தான் என தொடங்கி இன்று ஈரான்
வரை மேற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை தொடங்கியுள்ளது.ஆப்பிரிக நாடான லிபியாவின் கடாஃபியை புரட்சிப்படைகள் மூலம் மரணமடைய செய்ததன் மூலம் தனது ஆதிக்கத்தை ஜனநாயக ஆட்சி என்ற முறையில் நிறுத்தியது.அடுத்து தனது கவனத்தை தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் தொடங்கியபோது சீனாவின் ஆதிக்கத்தை மெல்ல உணர தொடங்கியது.

முதலில் பொருளாதார வளர்ச்சியை நிறுத்துவது?மேற்காசியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப் பொருட்களை பெறுவதை முடக்குவது. இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதிஇறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக மேற்காசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம்  கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத் தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால் தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மலாக்கா வழியாக எண்ணையை 1200 கி.மீ. சுற்றி கொண்டு செல்வதையும்,அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கவும் சீனா கடல் வழி மட்டுமல்லாது தரை வழியாகவும் எண்ணையை கொண்டு செல்ல பர்மாவின் கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணையை இறக்கி தரை வழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் வரை எண்ணைய் குழாயை பதித்து வருகிறது.இத்திட்டம் 2013ல் முடியும்.இத்திட்டத்தை தடுக்கும் நோக்கத்துடன் கடந்த டிசம்பர் மாதம் ஹிலாரி கிளிண்டன் பர்மா சென்று ஆங் சான் சூ கியையும் அதிபரையும் சந்தித்து பேசி உள்ளார்.




இந்த நேரத்தில் இலங்கையும் பாகிஷ்தானும் சீனாவுடன் நெருக்கமடைய ஆரம்பித்தன.சீனா தனது ரணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளத்தை இலங்கையில் அமைக்க திட்டம் தீட்டியது. இதற்காக இலங்கைக்கு ஏராளமான நிதியை சீனா கொடுத்தது.சீனாவின் பொருளாதரத்தையும் பலத்தையும் குறைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு இது மிகுந்த ஆத்திரமூட்டியது.அத்துடன் இலங்கையும் சீனாவும் மிகவும் நெருங்கி தெற்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இலங்கை உதவியது.உடனே அமெரிக்கா இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பழைய விவகாரங்களை தோண்ட ஆரம்பித்தது.அப்போதுதான் ராஜ பக்ஷெவின் மனித உரிமை மீறலான ஈழத்தமிழனனுக்கு எதிரான போர் துருப்புச்சீட்டகாக சிக்கியது.உடனே அமெரிக்கா ஐ.நா. சபையில் ராஜ பக்ஷேவிற்கு எதிராக 1).தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களைப் பயன்படுத்தியது.2).பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை செல்ல விடாமல் தடுத்தது.3).பாதுகாப்பு பகுதியில் இராணுவத்தை பயன்படுத்தியது.என்ற தீர்மானங்களை சபையில் கொண்டு வந்துள்ளது.இதில் வெற்றி பெறும் முனைப்புடனும் செயல்பட்டும் வருகிறது.இதிலிருந்து அமெரிக்கா தனது சர்வதிகார ஆட்சியை நிலைநிறுத்த மேற்கொள்ளும் ஒரு முயற்சியே தவிர ஈழத்தமிழன் மீது இரக்கமல்ல?.


ஈழத் தமிழன் மீது இந்தியாவின் நிலை என்ன?


அன்றும் சரி இன்றும் சரி ஈழத்தமிழன் மீது இந்தியா அரசாங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை.அன்று போர் நடந்தபோது தனது போட்டி நாடான சீனா எங்கே ஆயுதங்களை கொடுத்து இலங்கையுடன் நெருங்கி விடுமோ? என்ற அச்சத்திலே ஆயுதங்களை கொடுத்தது.கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்பது தெரிந்தும் ஆயுதங்களை கொடுத்துள்ளது இந்தியா.எதற்காக இந்தியா அச்சமடைந்தது?ஒருவேளை சீனா இலங்கையுடன் நெருக்கமாகி தனது இராணுவ தளத்தை அமைத்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய பிரச்சினையாகி விடும்..அதனால்தான் போரின்போது ஆயுதங்களைக் கொடுத்தும்,ஐ.நா. சபையில் 2009ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து காப்பாற்றியது.
தன்னைவிட சிறிய நாட்டுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதும்,அதனை ஆதரிப்பதும் ஏன்?..மாற்றம் ஆட்சியில் தேவையா?அண்டை நாடுகளுடான வெளியுறவு கொள்கையில் தேவையா?.
இன்னும் பிறிதொரு நாளில் நிறைவேறப்போகும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை இன்றுவரை மௌனமாகவே உள்ளது.
அமெரிக்காவிற்கு ஆதரவா?இலங்கைக்கு ஆதரவா? என்பதில் இந்தியா
இன்னும் தனது ஆதரவை தெரிவிப்பதில் மௌனம் சாதிக்கிறது.




இலங்கைக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவின் நன்மதிப்பை இழக்க வேண்டியிருக்கும்.ஆனால் அமெரிக்காவோ தீர்மானத்தில் வெற்றி பெற 100 பிரதிநிதிகளை உறுப்பு நாடுகளுடன் பேச களம் இறக்கியுள்ளது.
இன்றைய நிலையில் 22 நாடுகளின் ஆதரவை வெளிப்படையாக பெற்ற அமெரிக்காவிற்கு இன்னும் சில நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது.அமெரிக்காவிற்கு ஆதரவளித்தால் இலங்கை சீனாவுடன் நெருக்கமாகி விடும்.அத்துடன் ஆசிய நாடுகள் சிலவற்றின் நன்மதிப்பை இழக்க வேண்டி இருக்கும்.இந்த நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா சில நிபந்தனைகளை பேரம் பேசி வருகிறது.அதில் குறிப்பாக மன்னார் வளைகுடா எண்ணெய் படிமம் உரிமை.அமெரிக்காவின் நீண்டகாலம் விசுவாசியாக செயல்பட்ட பாகிஷ்தானின் மீதே அது தாக்குதல் நடத்தியது,ஈரானுடனான எண்ணைய் இறக்குமதியை நிறுத்த சொல்லியும் மறுக்கும் பட்சத்தில் ஜுனில் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி அது ஆலோசிப்பது போன்ற காரணங்களினாலும் இந்தியா தனது ஆதரவில் இன்றளவும் மௌனம் சாதிக்கிறது.இலங்கைக்கு ஆதரவளித்தால் தம்ழ் மக்களின் ஆதரவை இழப்பதுடன்,ஆட்சிக்கான திராவிட கட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டி இருக்கும்.சேனல் 4ன் வீடியோ ஆதாரம் இந்தியாவை ஈழத்தமிழன் பக்கம் திருப்பும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றி பெறுமா?அல்லது இலங்கைக்கு சாதகமாகுமா?
ஈழத்தமிழனுக்கு ஆதரவு இருக்கிறதா? அல்லது என்றுமே நிராகரிக்கப்படுபவனா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment