Friday, September 6, 2013

டெட்ராய்ட்டின் வீழ்ச்சி,முதலாளித்துவ கொள்கை வீழ்ச்சியின் தொடக்கமா?


அமெரிக்காவின் கார் உற்பத்திச் சின்னமாகவும்,உலகின் மிகப்பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் நகரம் தற்போது திவாலாகிவிட்டது.ஒருகாலத்தில் இரும்பின் நகரம்,தொழில்துறையின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நவீன உலகின் சொர்க்கம் என்றும்,உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் நகரம் என்றும்கூட சொல்லப்பட்டது.அகன்று விரிந்த சாலைகள்,பிரம்மாண்ட கட்டிடங்கள்,மிகப்பிரபலமான அமெரிக்க கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் என்று செல்வசெழிப்பில் திகழ்ந்த நகரம் இன்று நகரை நடத்த முடியாமல் திவால் ஆகிவிட்டது.ஒருகாலத்தில் 50 இலட்சமாக நகரின் மக்கள்தொகை இன்று 6 இலட்சத்திற்க்கும் கீழே குறைந்துவிட்டது.20-ம் நூற்றாண்டில் விதவிதமான கார்களை இரவுபகல் பாராமல் உற்பத்திச் செய்த நகரம் இன்று அழிந்து வரும் நகரம் போல காட்சியளிக்கிறது.இன்று அந்த நகரின் கடன்தொகை சுமார் 18.5 பில்லியன் டாலர்கள்.பிள்ளைகள் இல்லாத பள்ளிக்கூடம்,காவல் இல்லாத காவல்நிலையம்,கருவிகள் இல்லாத தீயணைப்பு நிலையம்,விளக்குகள் இல்லாத மின்கம்பங்கள்,குற்றங்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு, இடிந்து தொங்கும் கட்டிடங்கள்,குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள் என மீழ நகரமே முடியாத அழிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது.


தமிழ்நாட்டின் மொத்த கடன்தொகை இந்த நகராட்சியின் கடனுக்குச் சமம்.இந்த கடனில் அரசு மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களின் சேமிப்பு மற்றும் கடன்பத்திரங்கள்,ஊழியர்களின் பென்ஷன்,சேமிப்பு நல நிதி என பல இதில் அடங்கியுள்ளது.தற்போது இந்த நகராட்சியிடமும் பணமும் இல்லை,மீண்டும் கடன் கொடுக்க ஆளும் இல்லை.ஏற்கனவே உள்ள கடனைக் கொடுக்க வருமானமும் இல்லை.ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை,நகராட்சியையும் நடத்த முடியாததால் அந்நகராட்சி திவால் ஆகிவிட்டதாக அறிவித்துவிட்டது.

அமெரிக்க பொருளாதாரக் கொள்கையும்,டெட்ராய்ட்டின் வீழ்ச்சியும்:


அமெரிக்க பொருளாதார கோட்பாடின்படி டெட்ராய்ட் சுயேச்சை நிதி ஆளுமைக் கொண்ட நகரம்.அதாவது நகரத்தின் நிதி தேவைகளை பெரும்பாலும் வரி,வாடகை மூலம் ஈட்ட வேண்டும்.அதன் அடிப்படையில் டெட்ராய்டின் பொருளாதாரம் அங்கு குவிந்திருந்த வாகன தொழிற்சாலைகள் மற்றும் கார் உதிரி பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தது.அதனால் டெட்ராய்ட் தொழில்ரீதியாக துடிப்பாக இருந்த காலக்கட்டத்தில் பணக்கார நகராட்சியாக திகழ்ந்தது.பிரபல அமெரிக்க கார் கம்பெனிகளான போர்டு,கிரிஸ்ஸர்,ஜெனரல் மோட்டார்ஸ் போன்றவை இங்குதான் பிறந்து,வளர்ந்து உலகெங்கும் செல்வாக்கோடு விளங்கின.இவைகள் டெட்ராய்டிற்கு மிகபெரிய அளவில் வருமானத்தையும்,வேலைவாய்ப்பையும் அளித்தன.1970-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தால் அமெரிக்க கார் கம்பெனிகளுக்கு போட்டியாக ஜப்பான்,கொரியா,ஜெர்மனி போன்ற நாடுகளின் கார் கம்பெனிகள் மெதுவாக உள்நுழைந்ததால் இக்கம்பெனிகள் தனது உற்பத்தி தளத்தை சீனா,இந்தியா நாடுகளுக்கு மாற்றி டெட்ராய்ட்டில் இருந்த உற்பத்தித்தளத்தை மூடிவிட்டன.இதனால் அங்கு வேலைவாய்ப்புகள் பெருமளவு குறைந்தன.வேலை இல்லை,சம்பளம் இல்லை,பொருட்கள் வாங்க பணம் இல்லை,வங்கிகளில் போட பணம் இல்லை,அரசுக்கு வரி இல்லை.அரசுக்கு வருவாய் குறையத் தொடங்கியது. இதனால் டெட்ராய்ட் பொருளாதாரம் மெதுவாக ஆட்டம் காணத் தொடங்கியது.


டெட்ராய்ட் நிலை என்ன?

டெட்ராய்ட் திவாலாகி விட்டதாக அறிவித்துவிட்டதால் இனி மாநகராட்சியின் வேலை மற்றும் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.இனி நகரின் குப்பைகளை அள்ளுவது,புதிய மின்கம்பங்களை அமைப்பது,சாலைகள் போடுவது,சாக்கடைகளை அள்ளுவது,குடிநீர் வினியோகிப்பது என எல்லாவற்றையும் அங்குள்ள மக்களே செய்து கொள்ள வேண்டும்.முதலாளித்துவ கொள்கை டெட்ராய்ட் மக்களை கொண்டு சென்ற இந்த பாதை மிக மோசமானது.50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சொர்க்கம் என்று புகழப்பட்ட ஊர் பேய்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.மின்சாரம் இல்லாத வீடுகள்,இடிந்த கட்டிடங்கள் என்று இந்த நகரம் பொலிவிழந்து காணப்படுகிறது.டெட்ராய்ட்டின் இந்த நிலைக்கு ஊழலும் காரணம் என்கின்றனர்.நகரத்தின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் முதலாளித்துவ கொள்கைதான் என்று தெளிவாக தெரியும்போது அதை ஊழல் என்று திருப்பிவிட  முயல்கின்றனர்.இங்குள்ள எல்லா நிறுவனங்களும் அழிவின் விழிம்பிற்க்கு சென்று ஏதோ ஒரு வழியில் தப்பி தங்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.தொடர் வீழ்ச்சியால் தொழில்கள் சுருங்கியதால் பலர் வேலைவாய்ப்பை இழந்து ஊரைவிட்டே ஓடிய அவலத்தைக் கண்டது இந்த நகரம்.இப்போது அதன் இறுதி காலத்தை எண்ணி கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment