Friday, March 23, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வெற்றி யாருக்கு ஆதாயம்?அமெரிக்காவுக்கா?ஈழத்தமிழனனுக்கா?சீனாவுக்கா?



தமிழருக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.ஐ.நா. சபையில் போர்க்குற்றவாளி என இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் ஆதரவுடன் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா வெற்றி பெற்றது.15 நாடுகள் இலங்கையை ஆதரித்தன.8 நாடுகள் நடுநிலையாக எதையும் ஆதரிக்கவில்லை.

ஆதரவளித்த நாடுகள்:

ஆஸ்திரியா,பெல்ஜியம்,பெனின்,கம்ரூன்,சிலி,கொஸ்தாரிகா,செக் குடியரசு,குவாத்தமாலா,ஹங்கேரி,இந்தியா,இத்தாலி,லிபியா,மொரிஷியஸ்,நைஜீரியா,பெரு,போலந்து,மால்டோவா,ரூமேனியா,ஸ்பெயின்,சுவிஸ்,அமெரிக்கா,உருகுவே.

எதிராக வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ்,சீனா,கொங்கோ,கியூபா,ஈக்வடோர்,இந்தோனேசியா,குவைத்,மாலத்தீவு,பிலிப்பைன்ஸ்,கட்டார்,ரஷ்யா,சவுதி அரேபியா,தாய்லாந்து,
உகாண்டா,மௌரித்தானியா.

வாக்களிக்காத நாடுகள்:

மலேசியா,ஜோர்தான்,கிர்கிஸ்தான்,அங்கோலா,செனிகல்,புர்கினா பார்சோ,ஜிபூட்டி,பொட்சுவானா.

அமெரிக்காவின் இந்த வெற்றியால் யாருக்கு ஆதாயம்?
சீனாவுக்கு?
ஈழத்தமிழனனுக்கு?
அமெரிக்காவுக்கு?

சீனாவுக்கு:



ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையைக் காப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.மேலும் தமிழீனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டது.இருப்பினும் இதில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள சற்றே பொறுத்திருந்தேப் பார்த்தது.இலங்கையும் சீனாவின் ஆதரவில் தீர்மானம் எப்படியும் தோற்கடிக்கப்பட்டு விடும்,இந்தியாவும் தம்மை ஆதரிக்கும் என நம்பியது.ஆனால் தீர்மானத்தில் இந்தியா அமெரிக்காவிற்க்கு ஆதரவு தெரிவித்ததால், இதைப் பயன்படுத்தி இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில் சீனா இருந்தது.இதற்காகத் தான் அது இலங்கையைக் காப்பதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டது.இந்தியாவின் இந்த எதிர்நிலையைப் பயன்படுத்தி இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்க்கு எதிராக வலுவாக இலங்கையில் காலூன்ற அது உதவும் சீனாவின் திட்டம்.இதற்காகத்தான் தானே வலிய வந்து இலங்கையை காக்க அது தீவிர முயற்சி மேற்கொள்கிறது.சீனாவின் கடும் முயற்சி காரணமாக ஒற்றை இலக்கத்தில் இருந்த இலங்கையின் ஆதரவு 15 ஆக உயர்ந்தது.24 நாடுகளுக்கு அதிகமாகவே ஆதரவு கிடைக்கும் என சீனா நம்பியது.ஆனால் 8 நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் அவர்களால் வெல்ல முடியவில்லை.இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை அரசு கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியில் உள்ளது.இதுதான் சமயம் என்று சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகள் செய்யக்கூடும்.தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட இது சீனாவுக்கு இலங்கையில் வலுவாக காலுன்ற உதவும்.இதை வைத்து இந்தியாவின் கண்களில் இனி விரலை விட்டு ஆட்டலாம் என்பது சீனாவின் கணக்கு.தீர்மானம் தோற்றாலும் ஜெயித்தாலும் சீனாவிற்க்கு இந்த பிரச்சினை இலங்கையில் வலுவாக காலூன்ற அடித்தளமாக அமைந்துவிட்டது.

அமெரிக்காவுக்கு:



தீர்மானத்தில் வென்றாலும்கூட,சீனாவின் உதவிகளை இலங்கை பெறும் முன்பே தானும் இலங்கை அரசுடன் இணைந்து நல்லிணக்கப் பணிகளில் ஈடுபட தயாராக இருப்பதாகஅறிவித்தது,தீர்மானம் நிறைவேறிய மறுநாளே 1980களில் இலங்கை மீது விதிக்கப்பட்ட ஆயுதக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதன் இரட்டை நிலையைக் காட்டுகிறது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது,நம்பகமான போர் விசாரணையும் இலங்கை அரசு மேற்கொள்ளப்போவதுமில்லை என்பதும் அமெரிக்காவுக்கு தெரியும்.போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறுவதற்கான எந்த விவகாரங்களிலும் உள்நுழைய அமெரிக்காவிற்க்கு விருப்பமில்லை.ஏனென்றால் இத்தகைய தீர்மானம் ஒன்றின் மூலம் முதற்கட்டமாக இலங்கைக்கு கடிவாளம் ஒன்றைப் போட்டு விடப்போகிறது.அதன்பின்னரும் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால் அடுத்த தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயார் செய்யும்.மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்த்திட்டத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படுத்தவும்,அதற்காக வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஆலோசணை உதவிகள் குற்த்த அறிக்கையை 22ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க இலங்கை அரசு நிர்பதிக்கப்பட்டுள்ளது.(இப்போது முடிந்தது 19ஆவது கூட்டத்தொடர்,22ஆவது கூட்டத்தொடர் என்பது 2013 மார்ச்சில் தொடங்கும்.ஓர் ஆண்டில் 3 முறை(மார்ச்,ஜுன்,செப்டம்பர்)கூட்டத்தொடர் நடைபெறும்.)22ஆவது கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு வழங்கப்பட்ட மறைமுகமாக அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கால அவகாசமாகும்.ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் இலங்கையின் செயற்பாடுகளை அமெரிக்காவோ,சர்வதேச சமுதாயமோ எந்த கேள்வியும் எழுப்ப போவதில்லை.நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இணைந்து செயலாற்றுவது இலங்கைக்கு கடினமானதாக இருக்கும்.ஏனென்றால் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்திட்டங்கள் மறைமுகமாக அமெரிக்காவிற்கு சாதகமாக அமையும்.இந்த ஓராண்டில் இலங்கை அரசுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா இலங்கையில் உள்நுழைய வாய்ப்புண்டு.புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு நடத்திய யுத்தத்திற்கு ஒத்துழைத்த அமெரிக்காவிற்கு ஈராக்,லிபியா மற்றும் ஆப்கானிஸ்தானை விட இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தமாக எந்த அக்கறையும் இல்லை.அமெரிக்காவைப் பொறுத்தவரை, இலங்கை சீனாவுடனான நெருக்கமான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் விலகி நிற்கக் கொடுக்கப்படும் அழுத்தத்திற்க்கு ஒரு உபகரணமே இந்த தீர்மானம்.இதன்மூலம் அமெரிக்காவும் இலங்கையின் மெல்ல மெல்ல காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

ஈழத்தமிழனனுக்கு:



அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும் இதனால் ஈழத்தமிழனுக்கு எந்த ஆதாயமும் இல்லை.தமிழீனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை சர்வதேச கவனத்துக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியே தவிர இதனால் எந்த பலனுமில்லை.இலங்கைக்கு எதிரான தீர்மானம் தமிழர் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அல்ல.முற்றிலும் தமிழரின் விருப்பத்தையும்,நலன்களையும் நிறைவேற்றுவது அமெரிக்காவின் நோக்கமல்ல.அதற்காக போர்க்குற்ற்ங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விடும் என்றோ,மறக்கப்பட்டு விடும் என்றோ அர்த்தமல்ல.அதற்கான காலம் இன்னும் வரவில்லை.தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்க்கும் செயல்த்திட்டத்தை நிறைவேற்றவும் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு வருட மறைமுக கால அவகாசத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விடுமானால் அதன்பின்னரே அமெரிக்காவும் அதைச் சார்ந்த நாடுகளும் சர்வதேச விசாரணையைத் துவக்கும்.தீர்மானத்தின் முடிவை எதிர்நோக்கியிருந்த இலங்கை அரசு இதை தனக்கு எதிரான சர்வதேச சதி என்று உள்நாட்டில் பிரச்சாரம் செய்தது.அத்துடன் தனக்கு எதிராக தீர்மானம் அமைந்தால் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இந்த சதி என்று கூறிக்கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் போட்டிருந்தது.தீர்மானத்தை இந்தியா ஆதரித்தாலும் அதன் நோக்கத்தையே சிதைத்துள்ளது இந்தியாவின் இரட்டை நிலையைக் காட்டுகிறது.எவ்வாறெனில்,தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும்போது,"சட்டத்திற்கு முரணான படுகொலைகள் மற்றும் காணாமற்போதல் ஆகியவற்றிற்கு பக்காச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல்,வடக்கிலிருந்து இராணுவத்தை திரும்ப பெறுதல் இன்னும் பலவற்றில் மனித உரிமை மீறப்பட்டமை குறித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகியவற்றை சர்வதேச கவனத்துக்கு கொண்டு வருவதுடன் ஐ.நா மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை அரசு ஏற்க வேண்டும்" என்றது. ஆனால் இந்தியா இதில் தலையிட்டு "மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியையும் இலங்கை அரசுடன் கலந்தாலோசித்துவிட்டு அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்" என மாற்றியுள்ளது.இதனைச் சபையில் உடனே இலங்கை தரப்பு ஆதரித்ததாக தெரிகிறது.


கண்டிப்பாக இலங்கையின் அரசியலில் ராஜபக்ஷேவின் அனுமதியின்றி எந்த அசைவும் இருக்காது.தமிழர்களைச் சமாதானப்படுத்தவே இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளது.ஆனால் தீர்மானத்தின் நோக்கத்தை மாற்றி இலங்கையும் காப்பாற்றியுள்ளது.இதனால் சர்வதேச சமுதாயம் ஈழத்தமிழனுக்காக வழங்கும் எந்த தொழில்நுட்ப மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கான உதவியையும் இலங்கை அரசு ஏற்கப் போவதில்லை.இந்தியாவின் கடைசிநேரகைகழுவல்,தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டம் போன்றவை இலங்கை அரசை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.இதனால் கண்டிப்பாக சர்வதேச சமுதாயம் ஈழத்தமிழனுக்காக அளிக்கும் எந்த உதவியையும் ராஜபக்ஷேவின் அரசு நிராகரிக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது.இந்த தீர்மானத்தினால் ஈழத்தமிழனனுக்கு எந்த ஆதாயமும் இல்லை.தமிழீனப் படுகொலையை சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்றதை தவிர வேறு எந்த ஆதாயமும் இல்லை.

முடிவாக,இந்த சர்வதேச சமுதயாத்துக்கு,போரில் கொல்லப்பட்ட 40,000க்கும் அதிகமான மக்களின் உறவுகள்,விதவையாக்கப்பட்ட பெண்கள்,உடல் உறுப்புகளை இழந்தவர்களின் குரல் இன்னும் கேட்கவில்லையோ?போர்முடிந்தபின்பும் ஈழத்தமிழனின் மேல் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறை நடவடிக்கை இன்னும் அவர்கள் சமுதாயத்தை அடையவில்லையோ?ஒரு சமுதாயத்திற்கு எதிராக ஒரு அரசு நடத்திய இனப்படுகொலையை இன்னும் இந்த சர்வதேச சமுதாயம் கண்டுகொள்ளவில்லை.மனித உரிமைமீறல் ..மனித உரிமைமீறல் என்று கூறிக்கொள்ளும் சர்வதேச சமுதாயத்திற்க்கு மனித உரிமைமீறல் என்றால் என்னவென்றே இன்னும் தெரியவில்லையா?

என்றாவது ஒருநாள் ராஜபக்ஷேவும் அவனது கூட்டாளிகளும் சர்வதேச விசாரணைக் கூண்டில் குற்றவாளிகளாக நிற்கப் போகிறார்களோ அன்றுதான் ஈழத்தமிழர்களுக்கு உண்மையான விடிவுக்காலம்.அதுவரைப் பொறுத்திருக்க வேண்டியதுதான்.


BY

Vels

Saturday, March 17, 2012

அமெரிக்கா: ஈழத் தமிழன் மீது காட்டுவது இரக்கமா? தெற்காசியாவில் மேலாதிக்க தொடக்கமா?


ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.சபையின் 19ஆம் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத்தொடரில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன? அமெரிக்கா ஈழத் தமிழன் மீது ஏன் இரக்கம் காட்டுகிறது?
அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன?
ஈழத் தமிழன் மீது இந்தியாவின் நிலை என்ன? 


அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன? 

தென் கிழக்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை முழுவீச்சில் காட்டி வருகிறது.அடுத்து தனது கவனத்தை மேற்குப்பகுதியில் (தெற்கு ஆசியா) திருப்பியுள்ளது.ஆனால் உலக வல்லரசு அமெரிக்காவிற்கு இது பிடிக்கவில்லை.ஏனென்றால் தற்போதைய சீனாவின் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சக்கூடும்.மேலும் தனது ராணுவ பலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.சீனாவின் தற்போதைய நிலை தனது உலக ஆட்சிக்கு கேடு விளைவிக்குமோ? என்ற அச்சம் வேறு அமெரிக்காவுக்கு.

அமெரிக்கா,ஐரோப்பா கண்டங்களில் தனது நட்பு நாடுகளுடன் தனது ஆதிக்கத்தை நிறுத்தி கொண்ட அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்கா,ஆசியா கண்டங்களில் அவ்வளவு எளிதாக நிறுத்தி கொள்ள முடியவில்லை.முதலில் எண்ணெய் வளம் மிக்க ஈராக்,ஆப்கானிஸ்தான் என தொடங்கி இன்று ஈரான்
வரை மேற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை தொடங்கியுள்ளது.ஆப்பிரிக நாடான லிபியாவின் கடாஃபியை புரட்சிப்படைகள் மூலம் மரணமடைய செய்ததன் மூலம் தனது ஆதிக்கத்தை ஜனநாயக ஆட்சி என்ற முறையில் நிறுத்தியது.அடுத்து தனது கவனத்தை தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் தொடங்கியபோது சீனாவின் ஆதிக்கத்தை மெல்ல உணர தொடங்கியது.

முதலில் பொருளாதார வளர்ச்சியை நிறுத்துவது?மேற்காசியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப் பொருட்களை பெறுவதை முடக்குவது. இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதிஇறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக மேற்காசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம்  கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத் தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால் தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மலாக்கா வழியாக எண்ணையை 1200 கி.மீ. சுற்றி கொண்டு செல்வதையும்,அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கவும் சீனா கடல் வழி மட்டுமல்லாது தரை வழியாகவும் எண்ணையை கொண்டு செல்ல பர்மாவின் கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணையை இறக்கி தரை வழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் வரை எண்ணைய் குழாயை பதித்து வருகிறது.இத்திட்டம் 2013ல் முடியும்.இத்திட்டத்தை தடுக்கும் நோக்கத்துடன் கடந்த டிசம்பர் மாதம் ஹிலாரி கிளிண்டன் பர்மா சென்று ஆங் சான் சூ கியையும் அதிபரையும் சந்தித்து பேசி உள்ளார்.




இந்த நேரத்தில் இலங்கையும் பாகிஷ்தானும் சீனாவுடன் நெருக்கமடைய ஆரம்பித்தன.சீனா தனது ரணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளத்தை இலங்கையில் அமைக்க திட்டம் தீட்டியது. இதற்காக இலங்கைக்கு ஏராளமான நிதியை சீனா கொடுத்தது.சீனாவின் பொருளாதரத்தையும் பலத்தையும் குறைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு இது மிகுந்த ஆத்திரமூட்டியது.அத்துடன் இலங்கையும் சீனாவும் மிகவும் நெருங்கி தெற்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இலங்கை உதவியது.உடனே அமெரிக்கா இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பழைய விவகாரங்களை தோண்ட ஆரம்பித்தது.அப்போதுதான் ராஜ பக்ஷெவின் மனித உரிமை மீறலான ஈழத்தமிழனனுக்கு எதிரான போர் துருப்புச்சீட்டகாக சிக்கியது.உடனே அமெரிக்கா ஐ.நா. சபையில் ராஜ பக்ஷேவிற்கு எதிராக 1).தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களைப் பயன்படுத்தியது.2).பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை செல்ல விடாமல் தடுத்தது.3).பாதுகாப்பு பகுதியில் இராணுவத்தை பயன்படுத்தியது.என்ற தீர்மானங்களை சபையில் கொண்டு வந்துள்ளது.இதில் வெற்றி பெறும் முனைப்புடனும் செயல்பட்டும் வருகிறது.இதிலிருந்து அமெரிக்கா தனது சர்வதிகார ஆட்சியை நிலைநிறுத்த மேற்கொள்ளும் ஒரு முயற்சியே தவிர ஈழத்தமிழன் மீது இரக்கமல்ல?.


ஈழத் தமிழன் மீது இந்தியாவின் நிலை என்ன?


அன்றும் சரி இன்றும் சரி ஈழத்தமிழன் மீது இந்தியா அரசாங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை.அன்று போர் நடந்தபோது தனது போட்டி நாடான சீனா எங்கே ஆயுதங்களை கொடுத்து இலங்கையுடன் நெருங்கி விடுமோ? என்ற அச்சத்திலே ஆயுதங்களை கொடுத்தது.கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்பது தெரிந்தும் ஆயுதங்களை கொடுத்துள்ளது இந்தியா.எதற்காக இந்தியா அச்சமடைந்தது?ஒருவேளை சீனா இலங்கையுடன் நெருக்கமாகி தனது இராணுவ தளத்தை அமைத்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய பிரச்சினையாகி விடும்..அதனால்தான் போரின்போது ஆயுதங்களைக் கொடுத்தும்,ஐ.நா. சபையில் 2009ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து காப்பாற்றியது.
தன்னைவிட சிறிய நாட்டுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதும்,அதனை ஆதரிப்பதும் ஏன்?..மாற்றம் ஆட்சியில் தேவையா?அண்டை நாடுகளுடான வெளியுறவு கொள்கையில் தேவையா?.
இன்னும் பிறிதொரு நாளில் நிறைவேறப்போகும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை இன்றுவரை மௌனமாகவே உள்ளது.
அமெரிக்காவிற்கு ஆதரவா?இலங்கைக்கு ஆதரவா? என்பதில் இந்தியா
இன்னும் தனது ஆதரவை தெரிவிப்பதில் மௌனம் சாதிக்கிறது.




இலங்கைக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவின் நன்மதிப்பை இழக்க வேண்டியிருக்கும்.ஆனால் அமெரிக்காவோ தீர்மானத்தில் வெற்றி பெற 100 பிரதிநிதிகளை உறுப்பு நாடுகளுடன் பேச களம் இறக்கியுள்ளது.
இன்றைய நிலையில் 22 நாடுகளின் ஆதரவை வெளிப்படையாக பெற்ற அமெரிக்காவிற்கு இன்னும் சில நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது.அமெரிக்காவிற்கு ஆதரவளித்தால் இலங்கை சீனாவுடன் நெருக்கமாகி விடும்.அத்துடன் ஆசிய நாடுகள் சிலவற்றின் நன்மதிப்பை இழக்க வேண்டி இருக்கும்.இந்த நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா சில நிபந்தனைகளை பேரம் பேசி வருகிறது.அதில் குறிப்பாக மன்னார் வளைகுடா எண்ணெய் படிமம் உரிமை.அமெரிக்காவின் நீண்டகாலம் விசுவாசியாக செயல்பட்ட பாகிஷ்தானின் மீதே அது தாக்குதல் நடத்தியது,ஈரானுடனான எண்ணைய் இறக்குமதியை நிறுத்த சொல்லியும் மறுக்கும் பட்சத்தில் ஜுனில் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி அது ஆலோசிப்பது போன்ற காரணங்களினாலும் இந்தியா தனது ஆதரவில் இன்றளவும் மௌனம் சாதிக்கிறது.இலங்கைக்கு ஆதரவளித்தால் தம்ழ் மக்களின் ஆதரவை இழப்பதுடன்,ஆட்சிக்கான திராவிட கட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டி இருக்கும்.சேனல் 4ன் வீடியோ ஆதாரம் இந்தியாவை ஈழத்தமிழன் பக்கம் திருப்பும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றி பெறுமா?அல்லது இலங்கைக்கு சாதகமாகுமா?
ஈழத்தமிழனுக்கு ஆதரவு இருக்கிறதா? அல்லது என்றுமே நிராகரிக்கப்படுபவனா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.