Monday, November 18, 2013

மறக்கடிக்கப்பட்ட சரித்திர நாயகன்-வோ கியேன் கியாப் (vo nguyen giap)


உலகில் சரித்திர நாயகர்கள் பலரின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.அவர்களுள் உலகப்புகழ் பெற்ற வியட்நாமின் இராணுவ தளபதி வோ கியேன் கியாப்பும் ஒருவர்.மக்களுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திலும் எத்தகைய வல்லரசாலும் வெல்ல முடிய்யாது என்று உலக வல்லரசுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் கியாப்.யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே.ஆயுதங்களும்,பொருட்களும் அல்ல என்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்க்கு ஆணித்தரமாக உணர்த்தியவர்.பிரெஞ்ச் மற்றும் அமெரிக்க ஏகாபத்தியங்களை எதிர்த்த காரணத்தினால் என்னவோ சரித்திரத்தில் இவர் பெயர் இடம் பெறாமல் மறைக்கப்பட்டார்.கியாப்பின் இராணுவ உத்திகளையும்,எதிரிகளை மிரள செய்யும் போர்முறைகளையும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் நாடுகளின் படைத்தளபதியும்,படைவீரர்களும் இன்னும் மறக்காமல் உள்ளனர்.

இத்தகைய கியாப் 1911ல் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.அரசியல்,பொருளாதாரம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் படித்து பட்டம் பெற்றிருந்தார்.இளம் வயதிலேயே புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பிரெஞ்ச் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.1939ம் ஆண்டு ஜப்பான் வியாட்நாமின் மீது போர்த்தொடுத்தப்போது இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார்.அவரின் தந்தையும்,மனைவியும்,சகோதரியும் பிரெஞ்ச் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை தாக்க வியட்நாம் மக்கள் இராணுவ படையின் தலைமைத்தளபதியாக செயல்பட்டார்.இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததால் 1946-ஆம் ஆண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைப்பெற்றது.ஆனால் அவர்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் பிரெஞ்ச் படை தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் அமெரிக்க படையின் உதவியுடன் வந்தது.அதிகரித்து வரும் வியட்நாம் மக்களின் தாக்குதல்களைச் சமாளிக்க பியன்-தியன்-பு என்ற இடத்தில் வலுவான இராணுவத்தளம் ஒன்றை அமைக்க பிரெஞ்ச் படைகள் முயன்றன.அத்தளம் தகர்க்க முடியாததது மற்றும் வலுவானது என்று அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் படை நிபுணர்கள் நம்பினர்.சுற்றிலும் உயரமான மலைகளைக் கொண்ட அந்த இடத்தை ஆயுதம் ஏந்தி போராடிய வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்ச் படைகளை மண்டியிடச் செய்தனர்.ஆனால் அமெரிக்க இராணுவம் விட்டுக் கொடுப்பதாக இல்லை.பிரெஞ்ச் படைகள் வெளியேற்றத்திற்க்கு பின் நேரடியாக அமெரிக்கா ஆக்கிரமிக்க தொடங்கியது.உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு.பொருளாதார ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் யாராலும் அசைக்க முடியாத அமெரிக்க அரசை,பலவீனமான இராணுவ படைகளைக் கொண்ட விவசாய நாடான வியட்நாம் எதிர்கொண்டது.

1968-ஆம் ஆண்டு சயானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் தெற்கு வியட்நாமில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் பலவற்றிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் வியட்நாம் மக்கள் இராணுவம் தாக்குதல் நடத்தியது.அமெரிக்க படையும் எதிர்தாக்குதல் நடத்தியதில் இலட்ச்சக்கணக்கான மக்கள் மடிந்தனர்.கிட்டத்தட்ட 58,000 அமெரிக்க படைவீரர்கள் இத்தாக்குதலில் பலியாகினர்.ஈவுஇரக்கமின்றி கொல்லப்பட்ட வியட்நாம் மக்களின் உடல்களையும்,இறந்துபோன அமெரிக்க இராணுவ வீரர்களின் உடல்களையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அமெரிக்க அரசின் பிம்பங்கள் சரிந்தன.போரை நிறுத்த கோரி நடந்த அமெரிக்க மக்களின் போராட்டத்திற்க்கு அடிபணிந்தும்,போரில் ஏற்பட்ட தோல்வியாலும் அமெரிக்கா வியட்நாமில் இருந்து வேளியேறியது.வியட்நாம் ஒரே நாடாக விடுதலைப் பெற்றது.இந்த ஏகாபத்திய எதிர்ப்புப் போர்களின் தலைமை தளபதியாக செயல்பட்டவர் தான் இந்த கியாப்.அமெரிக்க இராணுவம் ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தமது இராணுவ படைகளை அனுப்பும்போது"வியட்நாம் போரில் நாம் கற்றுக்கொண்டதை மனதில் வைத்து போராடுங்கள்" என்றுதான் சொல்லப்படுமாம்.பிரெஞ்ச் படைக்கு பின்னடைவு ஏற்படும்போதெல்லாம் "வியட்நாம் கற்றுத்தந்த இராணுவப் பாடம் மறந்து போனதா?"என்றுதான் பயன்படுத்துவார்கள்.அந்த அளவிற்க்கு இந்த இரு வல்லரசுகளுக்கும் இராணுவப்பாடத்தைக் கற்றுக்கொடுத்த பெருமை இந்த வீரத்தளபதி கியாப்பிற்க்கு உண்டு.

பிரெஞ்ச் படைகளுக்கு எதிரான தாக்குதலிலும்,அமெரிக்க இராணுவத்திற்க்கு எதிரான தாக்குதலிலும் எப்படி வியட்நாம் மக்கள் படையால் வெற்றி பெற முடிந்தது?பொருளாதார பலமற்ற,பலவீனமான இராணுவ படைகளைக் கொண்ட நாட்டு மக்கள் எவ்வாறு தம்மை ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தினால் நவீனமயமான இராணுவத்தை எதிர்கொள்ள முடிந்தது?
வியட்நாம் மக்களின் ஏகாபத்தியம் எதிர்ப்புப் போராட்டத்தின் கோட்பாடுகளை வகுத்து ஒரே வழியில் மக்களை இணைத்து விடுதலைப் போராட்டத்தினை வழி நடத்தினார் கியாப்.உலகின் மிகப் பலமான பொருளாதார,இராணுவ சக்தி கூட தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு எதிர்ப்பை தகர்க்க முடியாது."நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்படும் மக்கள் போராட்டத்தின் முடிவை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே.எதிரிகளின் ஆயுதங்கள் அல்ல"என்று முழங்கினார் கியாப்.
எப்படியாவது வியட்நாமை கைப்பற்ற நினைத்த அமெரிக்காவிற்க்கு இறுதியில் தோல்விதான் கிடைத்தது.கியாப் தனது 102-ஆம் வயதில் அக்டோபர் 4-ஆம் தேதி 2013 அன்று மறைந்தார்.இத்தகைய கியாப்பிற்க்கு எமது வீர வணக்கங்கள்.