Friday, August 10, 2012

அந்நிய முதலீடு,பங்குச்சந்தை,ரூபாய் மதிப்பு இவைதான் இந்திய பொருளாதாரமா?


இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி அதாள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.சொல்லப் போனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4 ஆக இருந்தது.இந்த ஆண்டு தொடக்க காலாண்டில் அது 6.5% ஆக வீழ்ச்சி அடைந்தது.இரண்டாவது காலாண்டில் அது 5.3% என்னும் அளவிற்க்கு கடும் வீழ்ச்சியடைந்தது.(1% வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட 40 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்லது).இந்த வளர்ச்சியின் வீழ்ச்சி வேலையில்லாத் திண்டாத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கும்.அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 36% வீழ்ச்சியடைந்துள்ளது என்றும்,7% உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56,57 என்று விண்ணைத்தொடும் அளவிற்க்கு சரிந்துக்கொண்டே செல்கிறது என்றும் மத்திய அரசு கணக்கு காட்டுகிறது.ரூபாய் மதிப்பு சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலை உயர்ந்து வர்த்தக பற்றாக்குறை ஏற்படும்.நுகர்பொருள் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 8.0% லிருந்து 4.1% குறைந்துள்ளதையும்,தொழில்துறையின் வளர்ச்சி 0.1% வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய அரசு கணக்குக் காட்டுகிறது.ஆனால் உண்மைப் பொருளாதாரமோ இதைவிடப் பலமடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.தொழில் உற்பத்தி,அந்நிய முதலீடு..என்று பேசுகிறார்களே தவிர மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதைப் பற்றி பேசுவதில்லை.குறிப்பாக அரிசி,பருப்பு,பால்,முட்டை,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை 150% மேல் உயர்ந்துள்ளது.உணவுப்பணவீக்கம் 10.73% என்ற அளவில்தான் உள்ளது என்று உண்மை அறிக்கையை வெளியிடாமல் மறைக்கிறது.இந்தியப் பொருளாதாரோமோ இப்போதுதான் வீழ்ச்சியடைந்துள்ளது போல் சித்தகரிக்கின்றனர்.

தனியார்மயமும்,தாராளமயமும் இந்தியாவில் அதிரடியாக திணிக்கப்பட்டப் பின்னர் சிறுதொழிலும்,விவசாயமும் நசிந்து விவசாயத் தற்கொலை அதிகரித்தபோது அதனை பொருளாதார நெருக்கடியாக ஏற்கவில்லை.பங்குச்சந்தை சரிவு,அந்நிய முதலீடு வீழ்ச்சி,ரூபாய் மதிப்புச் சரிவு என்றதும் இப்போது பொருளாதார நெருக்கடிப் பற்றி பேசுகின்றனர்.தனியார்மயத்தின் விளைவு அம்பானி போன்றோர் உருவானது,தாராளமயம் மற்றும் உலகமயத்தின் விளைவு பங்குசந்தைச் சரிவு,ரூபாய் மதிப்புச்சரிவு என்பது போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இன்று இந்திய பொருளாதாரம் என்பது சில பண முதலைகளின் கையில் சிக்கியுள்ளது,பொருளாதாரமும் இதைச் சுற்றியே இருக்குமாறு வகுக்கப்பட்டுள்ளது.என்றைக்குதான் தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டு பொருளாதாரத்தை மதிப்பிட போகிறார்கள்.பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுகிறார்களே தவிர கல்விக்கட்டணம்,பேருந்துக்கட்டணம்,மருத்துவச்செலவு விலையேற்றம் என விலைவாசி ஏறியதை பற்றிப் பேசுவதில்லை.ஸ்டேண்டர்ட் அண்ட் புவர்ஸ் தர மதிப்பீட்டு நிறுவனம் கூட விவசாய நெருக்கடி பற்றி வாய்திறக்காமல் அந்நிய முதலீடு வீழ்ச்சி,நிதி நெருக்கடி பற்றிதான் பேசுகின்றன.நிதிபற்றாக்குறையை போக்க கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறிய பிரதமர்,அந்நிய முதலீட்டைப் பெருக்க கடும் நடவடிக்கைகளை எடுப்போம்,மானியங்களைக் குறைப்போம் என்று கூறியுள்ளார்.அதற்காக இந்திய அரசு பத்திரங்களில் அந்நிய அரசு நிதி நிறுவனங்கள்,அந்நிய அரசு மத்திய வங்கி,காப்பீட்டு நிதி நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.11ஆயிரம் கோடி முதலீடு செய்ய தாராள அனுமதி வழங்கியுள்ளது
.
மன்மோகன் அரசு முன்வைத்துள்ள நடவடிக்கைகள் பெரும் முதலாளிகளின் நலனைத் தான் கொண்டுள்ளது.நெருக்கடிக்குத் தீர்வாக நாட்டின் உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த எந்த திட்டமும் இல்லாததால்,மீண்டும் அது பொருளாதார நெருக்கடிக்குத் தான் தள்ளும்.உள்நாட்டுச் சந்தையை விரிவாக்கி வலுப்படுத்த தொழில் மற்றும் விவசாயத் துறையில் அரசு பெருமளவு முதலீடு செய்ய வேண்டும்.அதைவிட்டு விட்டு முதலீடுப் பற்றாக்குறை என்று கூறிக் கொண்டு அந்நிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.பருவமழை பொய்த்ததால் 40 சதவீதம் வரை விவசாய உற்பத்தி சரியும்,விளைவு உணவுப் பொருட்களின் விலை இன்னும் உயரும்.விவசாயிகளும் அரசின் உதவியை நம்பிதான் இருக்கின்றனர்.ஆனால் மன்மோகன்சிங்கோ ஐரோப்பா யூனியன் பொருளாதார சரிவிலிருந்து மீள 1000 கோடி டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.இங்கே விவசாயிகள் வாழ வழியில்லாமல் தற்கொலைச் செய்கிறார்கள் அவர்களை காப்பாற்றுவதைவிட்டு விட்டு,தன் காலில் காயத்தை வைத்துக்கொண்டு அடுத்தவன் காயத்திற்க்கு மருந்து போடும் கதையாக உள்ளது.இதுபோதாதென்று  மத்திய அரசு வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திற்க்கு ஒரு செல்போன் இலவசமாக கொடுக்க திட்டம் தீட்டியுள்ளது.

"ஒவ்வொரு மனிதருக்கும் செல்போன்"என்ற திட்டத்தின் மூலம் செல்போன் வழங்க திட்டம் தீட்டியுள்ளது.இதற்காக சுமார் 7,000 கோடி ஒதுக்கியுள்ளது.வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு இலவச செல்போன்களைக் கொடுத்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது இந்த அரசு.வயிற்றுக்கு வழி இல்லாதவனுக்கு செவிக்கு செல்போன் தேவையா?பொருளாதாரக் கொள்கைகள் தான் பயனளிகவில்லையென்றால் அரசின் நலத்திட்டங்கள் கூட ஏழைகளின் வறுமைநிலைக்கு எதிராக தான் அமைகிறது.மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சியால் யாருக்கு இலாபம்?தனியார்மயம் மற்றும் தாராளமயம் புகுத்தும் முன்னர் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 21 ஆக இருந்தது இன்று அதன் மதிப்பு 57 ரூபாய் வரை செல்கிறது.காரணம் அந்நிய முதலீடு மற்றும் உலகமயமாக்கலுக்கு திறந்து விடப்பட்ட கதவுகள்.மக்களின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் மட்டுமே வலிமையான பொருளாதாரமாக இருக்க முடியும்.எனவே இந்திய பொருளாதார மேதைகள் இதை கருத்தில் கொண்டு பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பார்களா?

by
VELS






Friday, August 3, 2012

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல சிறார்களை போட்டு நொறுக்கும் சீனத்து அகோரப் பயிற்சி!



ஒலிம்பிக்கில் மகளிர் 400 மீட்டர் மெட்லி நீச்சல் பிரிவில் 16 வயதேயான சீனாவின் யே ஷிவான் தங்கப் பதக்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதைப் பார்த்து அமெரிக்கா கூட ஊக்க மருந்து புகாரை எழுப்பியுள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சீனாவில் சிறார்களை எந்த அளவுக்கு சித்திரவதை செய்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பது குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
பார்ப்போர் மனங்களை வேதனைக்குள்ளாக்குகிறது அந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர், சிறுமியரின் நிலை. கைகளை முறுக்கியும், கால்களை இழுத்துப் பிடித்து வளைத்தும், உடல்களை போட்டு நொறுக்கி அள்ளியும் மிகக் கொடூரமாக பயிற்சி அளிக்கிறார்கள் சீனாவில்.
ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும், சிறார்களை தேர்வு செய்து அவர்களுக்கு இப்படி கொடூரமான முறையில் பயிற்சி தருகிறார்களாம் சீனாவில். இந்த வயதிலேயே இப்படிக் கடுமையாக பயிற்றுவித்தால்தான், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதால் இப்படி சித்திரவதைப் பயிற்சியாம்.

முன்பு கிழக்கு ஜெர்மனியில்தான் இப்படி சித்திரவதைக் கூடங்கள் போன்ற பயிற்சிக் கூடங்களில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சிறு வயதிலேயே மிகக் கடுமையான முறையில் பயிற்சி அளித்து உருவாக்கி வந்தனர். ஆனால் அதேபோன்ற சித்திரவதைப் பயிற்சிக் கூடங்கள் சீனாவிலும் இருப்பதாக தெரிய வந்திருப்பது அதிர வைப்பதாக உள்ளது.
ராணுவத்தில் கூட இப்படி கொடுமையான முறையில் பயிற்சி தர மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பயிற்சிப் பள்ளியில் சிறார்களை போட்டு துவம்சம் செய்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளி ஒன்றில்தான் தற்போது தங்கம் வென்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள யே ஷிவானும் நீச்சல் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான பயிற்சியின் மூலம் மோல்ட் செய்யப்பட்ட பொம்மை போலத்தான் யே ஷிவான் உள்ளிட்ட சீன விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உலகம் தற்போது பார்க்கிறது. மேலும் நீச்சல் போட்டிகளில் சீனா சமீ்ப காலமாக ஏகப்பட்ட முறைகேடுகளைச் செய்துள்ளதும், யே ஷிவான் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துவதாக விளையாட்டுத்துறையினர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர்.
ஷிவானைப் பார்த்தாலும் கூட ஒரு பெண்மைக்குரிய விஷயங்கள் அவரிடம் குறைவாகவே உள்ளன. இறுகிப் போன உடம்பு, சுவர் போல ஒரு உருவம், அகன்ற புஜங்கள், உருண்டு காணப்படும் தொடைகள் போன்றவற்றைப் பார்க்கும்போது மிகக் கடுமையான உடற் பயிற்சி பெற்றவரைப் போலவே தெரிகிறது.

ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை முன்பெல்லாம் அமெரிக்கா, சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி ஆகியவைதான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. இதை உடைத்து உள்ளே புகுந்த நாடுதான் சீனா. இந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் கூட சீனாதான் பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் பத்து வருடங்களுக்கு முன்பு சீன இரும்புத் திரை அரசு போட்ட அதிரடி திட்டங்கள்தான் காரணம். சாம்பியன்கள் அவர்களாக உருவாக மாட்டார்கள், நாம்தான் உருவாக்க வேண்டும் என்ற அந்த அடிப்படைத் திட்டத்தால்தான் சீன வீரர்களும், வீராங்கனைகளும் இன்று சர்வதேச அளவில் பளிச்சிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதன் பின்னணியில் பகீர் பயிற்சி முறைகள் இருப்பதுதான் நெஞ்சை உறைய வைக்கின்றன.
நாடு முழுவதும் விளையாட்டுப் பயிற்சிக்காகவே 3000 புதிய பயிற்சி மையங்களை சீன அரசு திறந்துள்ளது. இவை ராணுவ முகாம் போல உள்ளன. அந்த அளவுக்கு இங்கு கடுமையான பயிற்சி முறைகள் தரப்படுகின்றன.
பள்ளிகளில் படித்து வரும் சிறார்களிடம், விளையாட்டு ஆர்வம், திறமை இருந்தால் அது குறித்து அந்தந்த பிராந்திய பயிற்சியாளர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். உடனே அப்படிப்பட்ட குழந்தைகளை பயிற்சியாளர்கள் தூக்கிக் கொண்டு போய் முகாமில் சேர்த்து விடுவார்கள். பயிற்சி மையத்தில் அவர்களுக்குக் கடுமையான பயிற்சி அளிப்பார்கள். இது கட்டாயப் பயிற்சியாகும். பிடிக்கிறதோ, இல்லையோ சேர்ந்தேயாக வேண்டும்.
இப்படித்தான் யேவும் ஒரு பயிற்சி முகாமில் தனது 7வது வயதில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் குயிங் டிங்யி கூறுகையில், தனது 7 வயதில் நீச்சல் வீராங்கனையாக வேண்டும் என்று எனது மகள் விரும்பினாள். இதையடுத்து பயிற்சி மையத்தில் அவள் சேர்க்கப்பட்டாள். முதலில் அவளது உயரத்தைப் பார்த்து தடகளப் போட்டிகளுக்கு அவளைப் பரிந்துரைத்தனர். பின்னர் நீச்சலுக்கு மாற்றினர் என்றார்.
பயிற்சி முகாமில் யே சேர்ந்தவுடனேயே அவரை சென் ஜிங்குலின் ஸ்போர்ட்ஸ் பள்ளிக்கு மாற்றினர். அங்குதான் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடுமையான பயிற்சியின் விளைவாக 11 வயதிலேயே ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார் யே.
இந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சி முறைகள் கிட்டத்தட்ட சித்திரவதைக்குச் சமமானதாகும். குறிப்பாக ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளை போட்டு வதைக்கும் முறையைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வரும்.

மிகவும் சிறிய வயதிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார்களாம். அங்கு அவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சி தரப்படுகிறது. கைகளை வளைப்பது, கால்களை வளைப்பது, உடலை முறுக்குவது என பயிற்சி தரப்படுகிறது. இதற்காக, கை, கால்களை பயிற்சியாளர்கள் வளைக்கும்போது அந்தக் குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
சரியாகச் செய்யாமல் அழும் குழந்தைகளுக்குப் பயிற்சியாளர்கள் சரமாரியாக அடிக்கிறார்களாம்.
இதுகுறித்து ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்குப் புகார்களும் போயுள்ளன. ஆனால் அதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த சித்திரவதைப் பயிற்சி முகாம்கள் குறித்த புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனக் குழந்தைகளை ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளுக்குத் தயார் படுத்த எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்ற விவரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.
தற்போது அதீத வேகத்தில் நீச்சலடித்து, தங்கம் வென்று அனைவரையும் வியக்க வைத்துள்ள யே எப்படிப்பட்ட சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது தெரியவில்லை.

(தட்ஸ்தமிழ்)