Sunday, March 1, 2015

ஒபாமாவின் மதச்சுதந்திரம் தொடர்பான பேச்சுக்கு காரணம்-2



இந்தியா விதிக்கும் சில நிபந்தனைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு யார் வழங்குவது.ஏனென்றால் போபால் விஷவாயு கசிவில் அதன் அப்போதைய நிர்வாகி வாரன் ஆண்டர்சன் சில அரசியல் தலைவர்கள் உதவியுடன் இந்தியாவிலிருந்து தப்பியது இந்திய நாட்டு மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் விபத்து மற்றும் இழப்பீடு விவகாரங்களில் இந்தியா மிக கவனமாகக் கையாள வேண்டியுள்ளது.ஆனால் இவ்விவகாரத்தில் அமெரிக்காவும் முரண்டு பிடிப்பதால் அணு ஒப்பந்தம் கால தாமதமாகிக் கொண்டே வந்தது.இதற்கிடையில் ரஷ்யா,பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அணு ஆராய்ச்சியில் தரும் ஒத்துழைப்பை மேலும் பல மடங்கு அதிகரித்ததுடன் முதலீடுகளையும் அதிகரித்துள்ளனர்.இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.ஏனென்றால் தான் கணக்கு போட்டு வைத்துள்ள 100 பில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு பங்கு வந்துவிடுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறது.கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தார்.இந்தியாவுடன் 10-க்கும் மேற்பட்ட அணு உலைகள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டார்.இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்கா தன்னுடைய அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.இதனால்தான் ஒபாமா இந்திய பயணத்திற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்.

ஒபாமாவின் மறைமுக நெருக்கடி:


இந்திய பயணத்தில் அணு ஒப்பந்தம் முடிவு எட்ட படாததால் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்த ஒபாமா.இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டுமென தீர்மானித்தார்.தற்போதைய இந்திய அரசிற்கு மத அடிப்படையிலான நெருக்கடி கொடுத்தால் மட்டுமே விரைந்து முடிக்க முடியுமென்று ஒபாமா இந்தியப் பயணத்தின்போது தனது பேச்சில் மத அடிப்படையில் பிளவுகள் ஏற்படாதவரை இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று கூறினார்.உடனே இந்தியாவிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் மற்ற நாட்டின் தலைவர் வந்து நமது நாட்டின் மத ஒற்றுமையை பற்றி பேசும் அளவிற்கு நமது நாட்டின் நிலைமை உள்ளது என்று பெரிய பிரச்சினை உண்டு பண்ணினர்.இதுபோதாதென்று அமெரிக்க செனட் சபையில் குடியரசு கட்சியைச் சார்ந்த எம்.பி ஜோ.பிட்ஸ் ஆற்றிய உரையில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பன்மைத்துவம் தற்போது சகிப்புத்தன்மையின்மை,பிரிவினை,பெரும்பான்மைத்துவத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.மேலும் சிறுபான்மையினத்தவரின் மீது தாக்குதல் அதிகரித்து இருப்பதாக கூறினார்.இதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஒபாமா கூறுகையில் தற்போதைய இந்தியாவில் சமய சகிப்புத்தன்மையை பார்த்தால் காந்தி கூட அதிர்ச்சியடைந்து இருப்பார் என்று கூறினார்.இவ்வாறாக தொடர்ச்சியாக மத அடிப்படையிலான விஷயத்தை திரும்பத்திரும்ப கூறி வந்ததை புரிந்து கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் அரசாங்கம் வேறு ஒரு காரணத்திற்காக தொடர்ச்சியாக நெருக்கடி சந்தித்து வருகிறது என்று அவ்விஷயத்தை விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர்.


எதிர்காலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான தடை:


முதலாவது அணுசக்தி விவகாரம் என்றாலும்,இரண்டாவது காரணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான எதிர்கால நடவடிக்கை.ஏனென்றால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொண்டு மறைமுகமாக நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகும்.அவர்களுக்கு அதிக நிதி உதவியை அளிப்பது அமெரிக்கா,பிரான்ஸ்.அமெரிக்கா எப்போதுமே ஒரு கையை குலுக்கிக் கொண்டு மறுகையில் கீழே தள்ளி விடுவது கை வந்த கலை.தனக்கு சாதகமான அரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்த இத்தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.அமெரிக்காவிடம் நிதி உதவியை பெற்று கேரள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை திறக்க விடாமல் பல போராட்டங்களை நடத்தியது நாடறிந்ததே.கூடங்குளம் விவகாரத்தில் விழித்துக் கொண்ட மத்திய அரசு இதேபோன்று பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாதென்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளை ஆராய ஆரம்பித்ததுடன் மறைமுகமாக அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்த மத்திய அரசு கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி தடை செய்ய ஆய்வு செய்து வருகிறது.இவ்விஷயம் அமெரிக்காவுக்கு எட்ட அதன் பின்னரே எம்.பி ஜோ.பிட்ஸ்,அதிபர் ஒபாமா ஆகியோர் மறைமுக எச்சரிக்கையாக மத விவகாரங்களைப் பற்றி பேசினர்.
கிடைக்கும்போதெல்லாம் மத விவகாரம்,மத்திய அரசை ஐ.நா சபையின் மூலம் விமர்சிப்பது என்று அமெரிக்கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகிறது.இத்தகைய விவகாரங்களை திறம்பட சமாளித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வல்லரசுக் கனவிற்கு வலுவான அடித்தளம் அமைக்க முடியும்.

ஒபாமாவின் மதச்சுதந்திரம் தொடர்பான பேச்சுக்கு காரணம்-1

கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி மூன்று நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா குடியரசு தினச் சிறப்பு விருந்தினராக இந்தியா வந்தார்.குடியரசு தின இராணுவ அணிவகுப்பு மற்றும் கலாச்சார ஊர்திகளின் அணிவகுப்பின் விழாவில் கலந்து கொண்டு ஒபாமா சிறப்பித்தார்.பின்னர் இந்தியா-அமெரிக்கா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.முக்கியமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள தடைக்கற்களை நீக்கி விரைந்து முடிக்கவும்,ஏற்றுமதி சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒபாமா தீவிரம் காட்டினார்.ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படாததால் மிகுந்த அதிர்ச்சியும்,கோபமும் அடைந்தார் ஒபாமா.இதனால் இந்திய அரசாங்கத்திற்க்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் இறங்கியது அமெரிக்கா.

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்:



அணுகுண்டு சோதனைகளும் அதன் விளைவுகளும்:


1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இந்தியா பொக்ரானில் முத்ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது.அன்று முதல் பல தடைகள் இந்தியாவின் மீது விதிக்கப்பட்டன.குறிப்பாக அணு உலைகள் கட்ட,அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர,அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பம் தர பல நாடுகள் மறுத்தன.1974ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் Nuclear Suppliers Group.இந்த அமைப்பில் தற்போது 44 நாடுகள் உள்ளன.இந்தியாவுக்கு எந்த நாடும் யுரேனியத்தை தந்து விடக் கூடாது என்பதற்க்கு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமைப்பு.ஏனென்றால் இந்தியா தனது அணு ஆராய்ச்சிக்கும்,மின்சார உற்பத்திக்கும் யுரேனியத்தையும்,தோரியத்தையும் முழுமையாக சார்ந்துள்ளது.தோரியம் இந்தியாவில் அளவுக்கு அதிகமாக கிடைத்தாலும்,தோரியத்தை சிறப்பாக உபயோகிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை.எனவே நாம் முழுமையாக யுரேனியத்தைச் சார்ந்துள்ளோம்.இவ்வாறாக பல நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய இந்திய விஞ்ஞானிகள் தமது பலத்தை உலகுக்கு காட்ட இரண்டாவது முறையாக அணுகுண்டுச் சோதனைக்கு தயாராயினர்.1996-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒருநாள் பிரதமர் நரசிம்மராவ் கண் அசைக்க அணுகுண்டு வெடிப்பு சோதனைகளுக்கு தேவையான வேலைகளில் தீவிரமாக இருந்தபோது,அமெரிக்க உளவு செயற்கைகோள் உதவியுடன் இதை அறிந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை தொடர்பு கொண்டு ஒருபிடி பிடித்தார்.பில் கிளின்டனின் நிர்பந்தத்தால் கடைசி நேரத்தில் அச்சோதனை கைவிடப்பட்டது.
இச்சோதனையை நிறுத்திய பின்னராவது இந்தியாவின் மீதான தடைகள் நீக்கப்படும் என்று எதிர்ப்பாத்தனர்.ஆனால் தடைகள் நீக்கப்படவில்லை.

பொறுத்ததுபோதுமென வாஜ்பாய் அனுமதி அளிக்க அப்துல் கலாம் தலைமையில் 1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி அமெரிக்க உளவு செயற்கைகோள்களின் கண்ணில் மண்ணைத் தூவி இரண்டாவது முறையாக அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது இந்தியா.இந்த அணுகுண்டு,அணு ஆராய்ச்சியில் இந்தியாவின் பார்வையை மாற்றியது.30 ஆண்டு காலம் தடை போட்டு நாம் என்ன சாதித்தோம் என்று ஒவ்வொரு நாடுகளும் விவாதத்தில் இறங்கின குறிப்பாக அமெரிக்கா.

இந்தியாவுடன் நெருங்கி வந்த அமெரிக்கா:


இந்தியாவின் தனித்தன்மையும்,பொருளாதார வளர்ச்சியும் சற்றே அமெரிக்காவை யோசிக்க வைத்தது.மேலும் எதிர்கால உலகின் பாதுக்காப்பில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கம் காட்ட் ஆரம்பித்தது.இந்தியா-அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சி,விமான பயிற்சி என நெருங்கி வந்தது.அணு ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.இம்முடிவு எடுக்கப்பட்டவுடன்  இந்தியாவின் தொடர் முயற்சியின் காரணமாக இந்தியாவின் மீதான தடையை நீக்குவதாக அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்தார்.இந்திய-அமெரிக்க அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் அணு ஆராய்ச்சி மையங்கள் சர்வதேச அணுசக்தி கழகத்தின்(IAEA-International Atomic Energy Agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.இதை இந்திய விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்தனர்.இதற்கு தீர்வாக இந்திய விஞ்ஞானிகள் இந்திய அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன்,மிலிட்டரி என இரண்டாக பிரித்தனர்.இதில் சிவிலியன் எனப்படும் மின் உற்பத்திக்கு பயன்படும் அணு மையங்களை IAEA  பார்வையிடலாம் என யோசனை கூறினர்.மிலிட்டரி என்பது அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களிலிருந்து விலகி இருக்க வேண்டுமென கூறினர்.இதனை அமெரிக்காவும் ஏற்றது.இதன்பின்னர்தான் இந்திய-அமெரிக்க அணு ஆராய்ச்சி ஒப்பந்தம் இறுதிவடிவம் பெற்றது.


இந்தியாவுக்கு என்ன இலாபம்?


இந்த அணுசக்தி ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கு ஒரே ஒரு இலாபம்தான்.நாம் வாங்கும் யுரேனியத்தை மின் உற்பத்திக்கு பயன்படுத்திவிட்டு அதை மறுசுழற்சியில் ப்ளூட்டோனியமாக்கி அணுகுண்டு தயாரிக்கலாம்.இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான அணுமின் நிலையங்கள் யுரேனியத்தை கொண்டு இயங்குபவையாகும்.யுரேனியம் நமக்கு தங்குதடையின்றி சர்வதேச நாடுகளிருந்து கிடைக்க வேண்டுமெனில் நாம் இந்த ஒப்பந்த்ததை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.யுரேனியம்,ப்ளூட்டோனியம் கிடைத்தால் மட்டுமே எதிர்கால தேவைக்கேற்ப மின்உற்பத்தி செய்ய முடியும்.தோரியம் அதிக அளவில் கிடைத்தாலும் அதை உபயோகிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை.தோரியம் உபயோகபடுத்தும் தொழில்நுட்பத்தில் சிறப்பாகும் வரை யுரேனியம்,ப்ளூட்டோனியம் நமக்கு தேவை.அதற்கு அமெரிக்காவின் கடைக்கண் பார்வை இந்தியாவின் மீது விழ வேண்டும்.இதற்காக இந்த அணுசக்தி ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமது பிற்கால தேவைக்கும் யுரேனியத்தை சேமித்து கொள்ளலாம்.

அமெரிக்காவுக்கு என்ன இலாபம்?

எதிர்கால உலகின் பாதுகாப்பு,அமைதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை அமெரிக்கா முதன்மைக் காரணாமாக கூறினாலும்,மிகப்பெரிய வணிக வியாபாரத்தை இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கணக்கு போட்டு வைத்துள்ளது.இன்றைய நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபிரிவிதமாக உள்ளது.அடுத்த 30-40 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் எங்கேயோ போய்விடும் என்று உலக நாடுகள் நம்புகின்றன.மிகப்பெரிய வர்த்தக சந்தை தான் இன்றைய நிலையில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு என்று அர்த்தம்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க நாம் முதலில் அதிகரிக்க வேண்டியது மின்சார உற்பத்தி தான்.அதற்கு ஒரே தீர்வு அணு மின்சாரம் தான்.அதற்கான தொழில்நுட்பத்தை வழங்கபோவது மட்டும்தான் இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தம்.அதை வழங்க போவது அணுமின் தயாரிப்பில் அமெரிக்காவின் முன்னனி நிறுவனமான GE,WestingHouse.அவர்கள் இந்தியாவுக்கு வழங்கும் அணு தொழில்நுட்ப வர்த்தகம் தான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வர்த்தகங்களில் ஒன்றாகும்.கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.இதனால் தான் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டுகிறது.ஆனால் இந்தியாவின் சில நிபந்தனைகளை ஏற்க மறுத்து வருகிறது.இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தாவது அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது.