Monday, November 18, 2013

மறக்கடிக்கப்பட்ட சரித்திர நாயகன்-வோ கியேன் கியாப் (vo nguyen giap)


உலகில் சரித்திர நாயகர்கள் பலரின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.அவர்களுள் உலகப்புகழ் பெற்ற வியட்நாமின் இராணுவ தளபதி வோ கியேன் கியாப்பும் ஒருவர்.மக்களுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திலும் எத்தகைய வல்லரசாலும் வெல்ல முடிய்யாது என்று உலக வல்லரசுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் கியாப்.யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே.ஆயுதங்களும்,பொருட்களும் அல்ல என்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்க்கு ஆணித்தரமாக உணர்த்தியவர்.பிரெஞ்ச் மற்றும் அமெரிக்க ஏகாபத்தியங்களை எதிர்த்த காரணத்தினால் என்னவோ சரித்திரத்தில் இவர் பெயர் இடம் பெறாமல் மறைக்கப்பட்டார்.கியாப்பின் இராணுவ உத்திகளையும்,எதிரிகளை மிரள செய்யும் போர்முறைகளையும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் நாடுகளின் படைத்தளபதியும்,படைவீரர்களும் இன்னும் மறக்காமல் உள்ளனர்.

இத்தகைய கியாப் 1911ல் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.அரசியல்,பொருளாதாரம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் படித்து பட்டம் பெற்றிருந்தார்.இளம் வயதிலேயே புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பிரெஞ்ச் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.1939ம் ஆண்டு ஜப்பான் வியாட்நாமின் மீது போர்த்தொடுத்தப்போது இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார்.அவரின் தந்தையும்,மனைவியும்,சகோதரியும் பிரெஞ்ச் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை தாக்க வியட்நாம் மக்கள் இராணுவ படையின் தலைமைத்தளபதியாக செயல்பட்டார்.இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததால் 1946-ஆம் ஆண்டு வியட்நாம் ஜனநாயக குடியரசாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைப்பெற்றது.ஆனால் அவர்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் பிரெஞ்ச் படை தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் அமெரிக்க படையின் உதவியுடன் வந்தது.அதிகரித்து வரும் வியட்நாம் மக்களின் தாக்குதல்களைச் சமாளிக்க பியன்-தியன்-பு என்ற இடத்தில் வலுவான இராணுவத்தளம் ஒன்றை அமைக்க பிரெஞ்ச் படைகள் முயன்றன.அத்தளம் தகர்க்க முடியாததது மற்றும் வலுவானது என்று அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் படை நிபுணர்கள் நம்பினர்.சுற்றிலும் உயரமான மலைகளைக் கொண்ட அந்த இடத்தை ஆயுதம் ஏந்தி போராடிய வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்ச் படைகளை மண்டியிடச் செய்தனர்.ஆனால் அமெரிக்க இராணுவம் விட்டுக் கொடுப்பதாக இல்லை.பிரெஞ்ச் படைகள் வெளியேற்றத்திற்க்கு பின் நேரடியாக அமெரிக்கா ஆக்கிரமிக்க தொடங்கியது.உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ நாடு.பொருளாதார ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் யாராலும் அசைக்க முடியாத அமெரிக்க அரசை,பலவீனமான இராணுவ படைகளைக் கொண்ட விவசாய நாடான வியட்நாம் எதிர்கொண்டது.

1968-ஆம் ஆண்டு சயானில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் தெற்கு வியட்நாமில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் பலவற்றிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் வியட்நாம் மக்கள் இராணுவம் தாக்குதல் நடத்தியது.அமெரிக்க படையும் எதிர்தாக்குதல் நடத்தியதில் இலட்ச்சக்கணக்கான மக்கள் மடிந்தனர்.கிட்டத்தட்ட 58,000 அமெரிக்க படைவீரர்கள் இத்தாக்குதலில் பலியாகினர்.ஈவுஇரக்கமின்றி கொல்லப்பட்ட வியட்நாம் மக்களின் உடல்களையும்,இறந்துபோன அமெரிக்க இராணுவ வீரர்களின் உடல்களையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அமெரிக்க அரசின் பிம்பங்கள் சரிந்தன.போரை நிறுத்த கோரி நடந்த அமெரிக்க மக்களின் போராட்டத்திற்க்கு அடிபணிந்தும்,போரில் ஏற்பட்ட தோல்வியாலும் அமெரிக்கா வியட்நாமில் இருந்து வேளியேறியது.வியட்நாம் ஒரே நாடாக விடுதலைப் பெற்றது.இந்த ஏகாபத்திய எதிர்ப்புப் போர்களின் தலைமை தளபதியாக செயல்பட்டவர் தான் இந்த கியாப்.அமெரிக்க இராணுவம் ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தமது இராணுவ படைகளை அனுப்பும்போது"வியட்நாம் போரில் நாம் கற்றுக்கொண்டதை மனதில் வைத்து போராடுங்கள்" என்றுதான் சொல்லப்படுமாம்.பிரெஞ்ச் படைக்கு பின்னடைவு ஏற்படும்போதெல்லாம் "வியட்நாம் கற்றுத்தந்த இராணுவப் பாடம் மறந்து போனதா?"என்றுதான் பயன்படுத்துவார்கள்.அந்த அளவிற்க்கு இந்த இரு வல்லரசுகளுக்கும் இராணுவப்பாடத்தைக் கற்றுக்கொடுத்த பெருமை இந்த வீரத்தளபதி கியாப்பிற்க்கு உண்டு.

பிரெஞ்ச் படைகளுக்கு எதிரான தாக்குதலிலும்,அமெரிக்க இராணுவத்திற்க்கு எதிரான தாக்குதலிலும் எப்படி வியட்நாம் மக்கள் படையால் வெற்றி பெற முடிந்தது?பொருளாதார பலமற்ற,பலவீனமான இராணுவ படைகளைக் கொண்ட நாட்டு மக்கள் எவ்வாறு தம்மை ஆக்கிரமித்திருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தினால் நவீனமயமான இராணுவத்தை எதிர்கொள்ள முடிந்தது?
வியட்நாம் மக்களின் ஏகாபத்தியம் எதிர்ப்புப் போராட்டத்தின் கோட்பாடுகளை வகுத்து ஒரே வழியில் மக்களை இணைத்து விடுதலைப் போராட்டத்தினை வழி நடத்தினார் கியாப்.உலகின் மிகப் பலமான பொருளாதார,இராணுவ சக்தி கூட தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு எதிர்ப்பை தகர்க்க முடியாது."நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்படும் மக்கள் போராட்டத்தின் முடிவை தீர்மானிப்பது மக்கள் மட்டுமே.எதிரிகளின் ஆயுதங்கள் அல்ல"என்று முழங்கினார் கியாப்.
எப்படியாவது வியட்நாமை கைப்பற்ற நினைத்த அமெரிக்காவிற்க்கு இறுதியில் தோல்விதான் கிடைத்தது.கியாப் தனது 102-ஆம் வயதில் அக்டோபர் 4-ஆம் தேதி 2013 அன்று மறைந்தார்.இத்தகைய கியாப்பிற்க்கு எமது வீர வணக்கங்கள்.

Tuesday, September 17, 2013

சிரிய விவகாரத்தில் தோற்ற அமெரிக்கா



ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று இரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும் மற்றும் அவற்றை அழிக்கவும் சிரியா ஒப்புக்கொண்டுள்ளது.ஆனால் இராணுவ தாக்குதல் நடத்தினால் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம் என்று சிரியா எச்சரித்துள்ளது.சிரியாவின் மீது தீவிர இராணுவ தாக்குதலில் ஈடுபட தயாராக இருந்த அமெரிக்காவும் தனது முடிவை மாற்றியுள்ளது.

சிரியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்யுமானால் அந்நாட்டின் மீதான இராணுவ தாக்குதலை கைவிடுவதாக ஒபாமா கூறியுள்ளார்.மேலும் இராணுவ தாக்குதல் நடத்த நடவடிக்கை மும்முரமாக இறங்கியிருக்காவிட்டால் சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் சிரியா இரசாயன ஆயுதங்களைக் கொண்டு வந்திருக்காது என்றும் கூறினார்.இந்த திடீர் அறிவிப்புக்கு மக்களின் போதிய ஆதரவின்மையே காரணம் என்று கூறப்படுகிறது.மேலும் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வெறும் 25 சதவீதத்திற்க்கும் குறைவான மக்களே ஆதரவு தெரிவித்தனர்.இதனால் ஒபாமாவும் சிரியாவிற்க்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு நடத்த முடியாமல் பின்வாங்கிவிட்டார்.


இந்த சிரிய தாக்குதலின் பின்னால் அமெரிக்கா மிகப்பெரிய சதித்திட்டங்களை ரஷ்யா மற்றும் ஈரான் எதிராக வகுத்திருந்தது.மத்திய கிழக்கு நாடுகளில் சிரியாவில் மட்டும் தனது இராணுவ தளத்தை வைத்திருந்தது.சிரியாவைத் தாக்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முழுவதுமாக ரஷ்யாவை வெளியேற்றிவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தது.எப்படியும் இதை ரஷ்யா எதிர்க்கும் என்று தெரிந்தே அமெரிக்கா சவுதி அரேபியா மூலம் ரஷ்யாவிற்க்கு தங்கள் இராணுவ தளங்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கவும் தொடர்ந்து செயலாற்றவும் உறுதுணையாக இருப்பதாக தூது அனுப்பியது.இதைத் தொடர்ந்துதான் ரஷ்யா முழுவீச்சில் இவ்விவகாரத்தில் தலையிட ஆரம்பித்தது.ஒருவேளை சிரியாவை அமெரிக்கா கைப்பற்றினால் அதன் மூலம் ஈரானுக்கு நெருக்கடிக் கொடுக்க தீர்மானித்திருந்தது. ஈரானும் பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா என்று தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டது.இதனால் நிலரீதியாக ஈரானைத் தாக்க சிரியா வழியாக மட்டுமே வாய்ப்பிருந்ததால் சிரியாவை தாக்க அமெரிக்கா திட்டம் தீட்டியது.இதற்க்கு "One Attack and Two Target"என்று பெயரிட்டிருந்தது."One Attcak" என்பது சிரியாவையும்,"Two Target" என்பது ரஷ்யா மற்றும் ஈரானையும் குறிக்கிறது.இராணுவ ரீதியாக ரஷ்யா கடும் சவால் விடுத்ததும்,மக்களின் ஆதரவு போதிய அளவில் கிடைக்காததும் ஒபாமா இந்த முடிவில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஈராக் படையெடுப்பை நியாப்படுத்த கூறப்பட்ட பொய்களைப் போலவே,சிரியாவின் எதிரான போரை நியாப்படுத்த ஆதாரமற்றக் குற்றச் சாட்டாடுகளையும்,பொய்ப்பிரச்சராங்களையும் மக்களிடையே வழங்கினார்.இருந்தபோதிலும் போதிய ஆதரவை மக்களிடமிருந்து ஒபாமாவால் பெற முடியவில்லை.இராணுவ நடவடிக்கைக்கும் எதிர்ப்பு,மக்களின் ஆதரவின்மை போன்றவற்றால் ஒபாமா மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினார்.சிரிய விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்க்காக அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.இறுதியில் சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக தீர்மானிக்கப்பட்டது.இதற்க்குப்பின் தான் இப்பகுதியில் ஏற்பட்ட போர்பதட்டம் தணிந்தது.இருப்பினும் காலவரையற்ற நிபந்தனையை சிரியா கோரியுள்ளதால் அமெரிக்கா இன்னும் தனக்கு போருக்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறது.ஐ.நா சபையும் தனது அறிக்கையில் சிரிய அரசு தரப்பும்,போராட்டக்காரர்களும் ஆயுத தாக்குதலில் ஈடுபட்டதாக சமர்ப்பித்தது அமெரிக்காவிற்க்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.இருந்தாலும் சிரியாவின் மீது கண்ணோட்டத்துடன் தனது அடுத்த இலக்கை மத்திய கிழக்கு நாடுகளில் தேடுகின்றது அது அரபு நாடுகளாகக் கூட இருக்கலாம்.

Friday, September 6, 2013

டெட்ராய்ட்டின் வீழ்ச்சி,முதலாளித்துவ கொள்கை வீழ்ச்சியின் தொடக்கமா?


அமெரிக்காவின் கார் உற்பத்திச் சின்னமாகவும்,உலகின் மிகப்பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் நகரம் தற்போது திவாலாகிவிட்டது.ஒருகாலத்தில் இரும்பின் நகரம்,தொழில்துறையின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நவீன உலகின் சொர்க்கம் என்றும்,உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் நகரம் என்றும்கூட சொல்லப்பட்டது.அகன்று விரிந்த சாலைகள்,பிரம்மாண்ட கட்டிடங்கள்,மிகப்பிரபலமான அமெரிக்க கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் என்று செல்வசெழிப்பில் திகழ்ந்த நகரம் இன்று நகரை நடத்த முடியாமல் திவால் ஆகிவிட்டது.ஒருகாலத்தில் 50 இலட்சமாக நகரின் மக்கள்தொகை இன்று 6 இலட்சத்திற்க்கும் கீழே குறைந்துவிட்டது.20-ம் நூற்றாண்டில் விதவிதமான கார்களை இரவுபகல் பாராமல் உற்பத்திச் செய்த நகரம் இன்று அழிந்து வரும் நகரம் போல காட்சியளிக்கிறது.இன்று அந்த நகரின் கடன்தொகை சுமார் 18.5 பில்லியன் டாலர்கள்.பிள்ளைகள் இல்லாத பள்ளிக்கூடம்,காவல் இல்லாத காவல்நிலையம்,கருவிகள் இல்லாத தீயணைப்பு நிலையம்,விளக்குகள் இல்லாத மின்கம்பங்கள்,குற்றங்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிப்பு, இடிந்து தொங்கும் கட்டிடங்கள்,குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள் என மீழ நகரமே முடியாத அழிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது.


தமிழ்நாட்டின் மொத்த கடன்தொகை இந்த நகராட்சியின் கடனுக்குச் சமம்.இந்த கடனில் அரசு மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களின் சேமிப்பு மற்றும் கடன்பத்திரங்கள்,ஊழியர்களின் பென்ஷன்,சேமிப்பு நல நிதி என பல இதில் அடங்கியுள்ளது.தற்போது இந்த நகராட்சியிடமும் பணமும் இல்லை,மீண்டும் கடன் கொடுக்க ஆளும் இல்லை.ஏற்கனவே உள்ள கடனைக் கொடுக்க வருமானமும் இல்லை.ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை,நகராட்சியையும் நடத்த முடியாததால் அந்நகராட்சி திவால் ஆகிவிட்டதாக அறிவித்துவிட்டது.

அமெரிக்க பொருளாதாரக் கொள்கையும்,டெட்ராய்ட்டின் வீழ்ச்சியும்:


அமெரிக்க பொருளாதார கோட்பாடின்படி டெட்ராய்ட் சுயேச்சை நிதி ஆளுமைக் கொண்ட நகரம்.அதாவது நகரத்தின் நிதி தேவைகளை பெரும்பாலும் வரி,வாடகை மூலம் ஈட்ட வேண்டும்.அதன் அடிப்படையில் டெட்ராய்டின் பொருளாதாரம் அங்கு குவிந்திருந்த வாகன தொழிற்சாலைகள் மற்றும் கார் உதிரி பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தது.அதனால் டெட்ராய்ட் தொழில்ரீதியாக துடிப்பாக இருந்த காலக்கட்டத்தில் பணக்கார நகராட்சியாக திகழ்ந்தது.பிரபல அமெரிக்க கார் கம்பெனிகளான போர்டு,கிரிஸ்ஸர்,ஜெனரல் மோட்டார்ஸ் போன்றவை இங்குதான் பிறந்து,வளர்ந்து உலகெங்கும் செல்வாக்கோடு விளங்கின.இவைகள் டெட்ராய்டிற்கு மிகபெரிய அளவில் வருமானத்தையும்,வேலைவாய்ப்பையும் அளித்தன.1970-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தால் அமெரிக்க கார் கம்பெனிகளுக்கு போட்டியாக ஜப்பான்,கொரியா,ஜெர்மனி போன்ற நாடுகளின் கார் கம்பெனிகள் மெதுவாக உள்நுழைந்ததால் இக்கம்பெனிகள் தனது உற்பத்தி தளத்தை சீனா,இந்தியா நாடுகளுக்கு மாற்றி டெட்ராய்ட்டில் இருந்த உற்பத்தித்தளத்தை மூடிவிட்டன.இதனால் அங்கு வேலைவாய்ப்புகள் பெருமளவு குறைந்தன.வேலை இல்லை,சம்பளம் இல்லை,பொருட்கள் வாங்க பணம் இல்லை,வங்கிகளில் போட பணம் இல்லை,அரசுக்கு வரி இல்லை.அரசுக்கு வருவாய் குறையத் தொடங்கியது. இதனால் டெட்ராய்ட் பொருளாதாரம் மெதுவாக ஆட்டம் காணத் தொடங்கியது.


டெட்ராய்ட் நிலை என்ன?

டெட்ராய்ட் திவாலாகி விட்டதாக அறிவித்துவிட்டதால் இனி மாநகராட்சியின் வேலை மற்றும் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.இனி நகரின் குப்பைகளை அள்ளுவது,புதிய மின்கம்பங்களை அமைப்பது,சாலைகள் போடுவது,சாக்கடைகளை அள்ளுவது,குடிநீர் வினியோகிப்பது என எல்லாவற்றையும் அங்குள்ள மக்களே செய்து கொள்ள வேண்டும்.முதலாளித்துவ கொள்கை டெட்ராய்ட் மக்களை கொண்டு சென்ற இந்த பாதை மிக மோசமானது.50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சொர்க்கம் என்று புகழப்பட்ட ஊர் பேய்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.மின்சாரம் இல்லாத வீடுகள்,இடிந்த கட்டிடங்கள் என்று இந்த நகரம் பொலிவிழந்து காணப்படுகிறது.டெட்ராய்ட்டின் இந்த நிலைக்கு ஊழலும் காரணம் என்கின்றனர்.நகரத்தின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் முதலாளித்துவ கொள்கைதான் என்று தெளிவாக தெரியும்போது அதை ஊழல் என்று திருப்பிவிட  முயல்கின்றனர்.இங்குள்ள எல்லா நிறுவனங்களும் அழிவின் விழிம்பிற்க்கு சென்று ஏதோ ஒரு வழியில் தப்பி தங்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.தொடர் வீழ்ச்சியால் தொழில்கள் சுருங்கியதால் பலர் வேலைவாய்ப்பை இழந்து ஊரைவிட்டே ஓடிய அவலத்தைக் கண்டது இந்த நகரம்.இப்போது அதன் இறுதி காலத்தை எண்ணி கொண்டிருக்கிறது.


Monday, September 2, 2013

சிரியாவும்,அமெரிக்காவின் சீரியஸ் நாடகமும்



சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அதிபர் பஷர் அல் ஆசாத் போராட்டக்காரர்களை அடக்க இரசாயனக் குண்டு வீசி அப்பாவி பொதுமக்கள் 1200 பேரைக் கொன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.மேலும் தடை செய்யப்பட்ட  இரசாயனங்களைப் பயன்படுத்தியதாக அந்நாட்டின் மீதுப் போர் தொடுக்க அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஏன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் மீதே போர் தொடுக்க முயல்கிறது?இந்த முறை ஏன் சிரியா விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

சிரியாவும்,அமெரிக்காவும்:



ஆரம்பத்திலிருந்தே சிரியாவின் மீது சிறிய அளவிலான கண்ணோட்டத்துடன் மற்ற வளைகுடா நாடுகளில்(அரபுதேசம் தவிர்த்து) தனது ஆதிக்கத்தை ஆரம்பித்தது அமெரிக்கா.ஆப்கானிஸ்தான்,ஈராக் என்று தொடங்கிய அமெரிக்காவால் ஈரானிடம் தோல்வியைத் தழுவியது.சிரியாவும் தனது எண்ணெய் வர்த்தக பணமதிப்பை யூரோவுக்கு மாற்றியவுடன் அமெரிக்கா தனது கவனத்தை தீவிரமாக்கியது.அரபு நாடுகளில் தற்போது நடந்து வரும் சர்வதிகார ஆட்சியை நீக்கிவிட்டு,ஜனநாயக ஆட்சியை தளைக்க தானாக உருவானது தான் அரபு வசந்தம்(Arab Spring).இந்த அரபு வசந்த போராட்டம் துனீசியாவில் ஆரம்பித்து எகிப்து,லிபியா,ஏமன் என்று பரவியது.இந்த நாடுகளில் சர்வதிகாரிகளும் பதவி விலகினர்.மக்கள் போராட்டம் என்றாலும் இந்த போராட்டக்காரர்களுக்கு பண உதவி மற்றும் ஆயுத உதவிகளை செய்வது அமெரிக்க அரசு.ஏனென்றால் தனது ஆதரவு பெற்ற போராட்டக்காரர்களை வெற்றி பெற வைத்தால் ஜனநாயகம் என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு அந்நாட்டை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு.ஆனால் ஈரானிடம் தோல்வி அமெரிக்காவின் ஆதிக்கத்திற்க்கு சிறிது கலக்கத்தை உண்டாக்கியது.சிரியா எண்ணெய் வர்த்தக பணமதிப்பை மாற்றியதும்,ஈரானிடம் தோல்வி அமெரிக்காவை சற்றே ஆட்டியது.அதனால் வளைகுடா நாடுகளில் அமெரிக்கா தீவிரமாக கவனம் செலுத்த துவங்கியுள்ளது.இதன் தாக்கம் தான் சிரியா விவகாரம்.ஏற்கனவே போராட்டக்காரர்களிடம் 60% நாட்டை இழந்துவிட்டார் அதிபர்.தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி போராட்டக்காரர்களின் ஆக்கிரமப்பில் உள்ள பகுதி என்பதால் தாக்குதல் நடத்தியது அதிபர்தானா?என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஏனென்றால் அமெரிக்கா கூட போராட்டக்காரர்களின் உதவியுடன் இத்தாக்குதலை நடத்திவிட்டு இவ்விவகாரத்தை உலக அளவில் பெரிதாக்கிவிட்டால் நட்புநாடுகளின் ஆதரவை எளிதாக பெறலாம் அத்துடன் சிரியாவை தாக்கி எளிதாக கைப்பற்றிவிடலாம்  என்பதுகூட அமெரிக்காவின் திட்டமாக இருக்கலாம்.

இரஷ்யா,ஈரானின் எதிர்ப்பும் சீனாவின் அமைதியும்: 



ஈரானை அமெரிக்கா தாக்கினால் ஹோர்மூஸ் நீரிணை(உலகின் 20% எண்ணெய் இந்த வழியாக எடுத்து செல்லப்படுகிறது) மூடப் போவதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது.இதனால் அமெரிக்கா அதிரடியாக பின்வாங்கியது.இருந்தாலும் ஈரானை தந்திரமாக வீழ்த்த அதன் அண்டை நாடுகளின் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.அதன் தொடக்கமாகத்தான் சிரியாவின் மீது கவனத்தை தொடங்கியுள்ளது.இதை அறிந்த ஈரான் சிரியாவுக்கு இராணுவ உதவிகளை அளிக்க முன் வந்துள்ளது.இதே நேரத்தில் இரஷ்யாவும் சிரியாவை தாக்கினால் தக்க பதிலடி என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.அத்துடன் தனது போர்க்கப்பல்களை சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.அத்துடன் இரஷ்யாவின் நேரடி எச்சரிக்கையால் இங்கிலாந்து இவ்விவகாரத்தில் பின்வாங்கியுள்ளது.அமெரிக்காவும் தனது நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டி கொண்டு வருகிறது.சீனாவும் தனது நிலைபாட்டை இன்னும் தெளிவாக சொல்லவில்லை கண்டிப்பாக அமெரிக்காவிற்க்கு எதிராக தான் தனது முடிவுகளை அறிவிக்கும்.அது வெறும் ஆதராவாக இருக்கும் பட்சத்தில் அமெரிகா தனது முடிவில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும்.ஒருவேளை இராணுவ உதவிகளை சீனா சிரியாவுக்கு அளிக்க முன்வந்தால் அது அமெரிக்காவிற்க்கு பெரிய அடியாக விழும்.

அமெரிக்கா மற்றும் நட்புநாடுகள் vs இரஷ்யா-ஈரான்-சிரியா:



சிரியாவிற்க்கு இரஷ்யா தூண்மாதிரி இருப்பதால் அமெரிக்கா சற்று கலக்கத்தில் உள்ளது.ஏனென்றால் இரஷ்யாவின் ஆயுத பலம் தன்னைவிட வலுவானது என்பதாலும் மேலும் அரைநூற்றாண்டாக இரஷ்யா அமெரிக்காவை தாக்குவதற்க்கு சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.ஒருவேளை சிரியா மீது தாக்குதல் நடத்தினால் இரஷ்யா முழுவீச்சில் திருப்பி தாக்கும்.அத்துடன் இருநாடுகளும் மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டும் இதில் கண்டிப்பாக சீனா மற்றும் வடகொரியா இரஷ்யாவுக்கே ஆதரவளிக்கும்.அது அமெரிக்காவிற்க்கு மிகப்பெரிய பேரிடியாக அமையும்.இதனால் மூன்றாவது உலகப்போர் உண்டாக வாய்ப்புண்டு.ஒருவேளை போர்மூண்டால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரிய அடியை வாங்கும்.இதனால் அமெரிக்கா சற்றே யோசித்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கும்.மேலும் மக்களின் எதிர்ப்பு சிரிய அதிபருக்கு எதிராக இருப்பதால்  தனது அரபு நாடுகளின் உதவியுடன்கூட தந்திரமாக சிரியாவை கைப்பற்றலாம்.சிரிய மக்களின் ஒற்றுமையின்மை அமெரிக்காவிற்க்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.இதனால் எளிதாக மக்களிடையே பிரச்சினையை உண்டாக்கிவிட்டு தனது ஆதரவுபெற்ற போராட்டக்காரர்களின் உதவியுடன் அமைதியாக சிரியாவை கைப்பற்றி தனது ஆதரவாளர்களை ஆட்சியில் அமர்த்தலாம்.அமைதியாக கைப்பற்றலாம் என்றால் ஆண்டுகள் பல ஆகுமென்பதால் கண்டிப்பாக போர் மூலமாகதான் அமெரிக்கா கைப்பற்ற முயலும் அது எத்தகைய அழிவை உண்டாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.கண்டிப்பாக ஈராக்,ஆப்கானிஸ்தானில் நடந்த சேதங்களை விட மிகப்பெரிய அளவில் இந்த போரால் சேதங்கள் உண்டாகும்