Friday, August 10, 2012

அந்நிய முதலீடு,பங்குச்சந்தை,ரூபாய் மதிப்பு இவைதான் இந்திய பொருளாதாரமா?


இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி அதாள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.சொல்லப் போனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4 ஆக இருந்தது.இந்த ஆண்டு தொடக்க காலாண்டில் அது 6.5% ஆக வீழ்ச்சி அடைந்தது.இரண்டாவது காலாண்டில் அது 5.3% என்னும் அளவிற்க்கு கடும் வீழ்ச்சியடைந்தது.(1% வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட 40 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவல்லது).இந்த வளர்ச்சியின் வீழ்ச்சி வேலையில்லாத் திண்டாத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கும்.அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 36% வீழ்ச்சியடைந்துள்ளது என்றும்,7% உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 56,57 என்று விண்ணைத்தொடும் அளவிற்க்கு சரிந்துக்கொண்டே செல்கிறது என்றும் மத்திய அரசு கணக்கு காட்டுகிறது.ரூபாய் மதிப்பு சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலை உயர்ந்து வர்த்தக பற்றாக்குறை ஏற்படும்.நுகர்பொருள் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 8.0% லிருந்து 4.1% குறைந்துள்ளதையும்,தொழில்துறையின் வளர்ச்சி 0.1% வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மத்திய அரசு கணக்குக் காட்டுகிறது.ஆனால் உண்மைப் பொருளாதாரமோ இதைவிடப் பலமடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.தொழில் உற்பத்தி,அந்நிய முதலீடு..என்று பேசுகிறார்களே தவிர மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதைப் பற்றி பேசுவதில்லை.குறிப்பாக அரிசி,பருப்பு,பால்,முட்டை,சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை 150% மேல் உயர்ந்துள்ளது.உணவுப்பணவீக்கம் 10.73% என்ற அளவில்தான் உள்ளது என்று உண்மை அறிக்கையை வெளியிடாமல் மறைக்கிறது.இந்தியப் பொருளாதாரோமோ இப்போதுதான் வீழ்ச்சியடைந்துள்ளது போல் சித்தகரிக்கின்றனர்.

தனியார்மயமும்,தாராளமயமும் இந்தியாவில் அதிரடியாக திணிக்கப்பட்டப் பின்னர் சிறுதொழிலும்,விவசாயமும் நசிந்து விவசாயத் தற்கொலை அதிகரித்தபோது அதனை பொருளாதார நெருக்கடியாக ஏற்கவில்லை.பங்குச்சந்தை சரிவு,அந்நிய முதலீடு வீழ்ச்சி,ரூபாய் மதிப்புச் சரிவு என்றதும் இப்போது பொருளாதார நெருக்கடிப் பற்றி பேசுகின்றனர்.தனியார்மயத்தின் விளைவு அம்பானி போன்றோர் உருவானது,தாராளமயம் மற்றும் உலகமயத்தின் விளைவு பங்குசந்தைச் சரிவு,ரூபாய் மதிப்புச்சரிவு என்பது போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இன்று இந்திய பொருளாதாரம் என்பது சில பண முதலைகளின் கையில் சிக்கியுள்ளது,பொருளாதாரமும் இதைச் சுற்றியே இருக்குமாறு வகுக்கப்பட்டுள்ளது.என்றைக்குதான் தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கொண்டு பொருளாதாரத்தை மதிப்பிட போகிறார்கள்.பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுகிறார்களே தவிர கல்விக்கட்டணம்,பேருந்துக்கட்டணம்,மருத்துவச்செலவு விலையேற்றம் என விலைவாசி ஏறியதை பற்றிப் பேசுவதில்லை.ஸ்டேண்டர்ட் அண்ட் புவர்ஸ் தர மதிப்பீட்டு நிறுவனம் கூட விவசாய நெருக்கடி பற்றி வாய்திறக்காமல் அந்நிய முதலீடு வீழ்ச்சி,நிதி நெருக்கடி பற்றிதான் பேசுகின்றன.நிதிபற்றாக்குறையை போக்க கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறிய பிரதமர்,அந்நிய முதலீட்டைப் பெருக்க கடும் நடவடிக்கைகளை எடுப்போம்,மானியங்களைக் குறைப்போம் என்று கூறியுள்ளார்.அதற்காக இந்திய அரசு பத்திரங்களில் அந்நிய அரசு நிதி நிறுவனங்கள்,அந்நிய அரசு மத்திய வங்கி,காப்பீட்டு நிதி நிறுவனங்கள் ஏறத்தாழ ரூ.11ஆயிரம் கோடி முதலீடு செய்ய தாராள அனுமதி வழங்கியுள்ளது
.
மன்மோகன் அரசு முன்வைத்துள்ள நடவடிக்கைகள் பெரும் முதலாளிகளின் நலனைத் தான் கொண்டுள்ளது.நெருக்கடிக்குத் தீர்வாக நாட்டின் உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த எந்த திட்டமும் இல்லாததால்,மீண்டும் அது பொருளாதார நெருக்கடிக்குத் தான் தள்ளும்.உள்நாட்டுச் சந்தையை விரிவாக்கி வலுப்படுத்த தொழில் மற்றும் விவசாயத் துறையில் அரசு பெருமளவு முதலீடு செய்ய வேண்டும்.அதைவிட்டு விட்டு முதலீடுப் பற்றாக்குறை என்று கூறிக் கொண்டு அந்நிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.பருவமழை பொய்த்ததால் 40 சதவீதம் வரை விவசாய உற்பத்தி சரியும்,விளைவு உணவுப் பொருட்களின் விலை இன்னும் உயரும்.விவசாயிகளும் அரசின் உதவியை நம்பிதான் இருக்கின்றனர்.ஆனால் மன்மோகன்சிங்கோ ஐரோப்பா யூனியன் பொருளாதார சரிவிலிருந்து மீள 1000 கோடி டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.இங்கே விவசாயிகள் வாழ வழியில்லாமல் தற்கொலைச் செய்கிறார்கள் அவர்களை காப்பாற்றுவதைவிட்டு விட்டு,தன் காலில் காயத்தை வைத்துக்கொண்டு அடுத்தவன் காயத்திற்க்கு மருந்து போடும் கதையாக உள்ளது.இதுபோதாதென்று  மத்திய அரசு வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திற்க்கு ஒரு செல்போன் இலவசமாக கொடுக்க திட்டம் தீட்டியுள்ளது.

"ஒவ்வொரு மனிதருக்கும் செல்போன்"என்ற திட்டத்தின் மூலம் செல்போன் வழங்க திட்டம் தீட்டியுள்ளது.இதற்காக சுமார் 7,000 கோடி ஒதுக்கியுள்ளது.வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு இலவச செல்போன்களைக் கொடுத்து அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது இந்த அரசு.வயிற்றுக்கு வழி இல்லாதவனுக்கு செவிக்கு செல்போன் தேவையா?பொருளாதாரக் கொள்கைகள் தான் பயனளிகவில்லையென்றால் அரசின் நலத்திட்டங்கள் கூட ஏழைகளின் வறுமைநிலைக்கு எதிராக தான் அமைகிறது.மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சியால் யாருக்கு இலாபம்?தனியார்மயம் மற்றும் தாராளமயம் புகுத்தும் முன்னர் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 21 ஆக இருந்தது இன்று அதன் மதிப்பு 57 ரூபாய் வரை செல்கிறது.காரணம் அந்நிய முதலீடு மற்றும் உலகமயமாக்கலுக்கு திறந்து விடப்பட்ட கதவுகள்.மக்களின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் மட்டுமே வலிமையான பொருளாதாரமாக இருக்க முடியும்.எனவே இந்திய பொருளாதார மேதைகள் இதை கருத்தில் கொண்டு பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பார்களா?

by
VELS






Friday, August 3, 2012

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல சிறார்களை போட்டு நொறுக்கும் சீனத்து அகோரப் பயிற்சி!



ஒலிம்பிக்கில் மகளிர் 400 மீட்டர் மெட்லி நீச்சல் பிரிவில் 16 வயதேயான சீனாவின் யே ஷிவான் தங்கப் பதக்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதைப் பார்த்து அமெரிக்கா கூட ஊக்க மருந்து புகாரை எழுப்பியுள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சீனாவில் சிறார்களை எந்த அளவுக்கு சித்திரவதை செய்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பது குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
பார்ப்போர் மனங்களை வேதனைக்குள்ளாக்குகிறது அந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர், சிறுமியரின் நிலை. கைகளை முறுக்கியும், கால்களை இழுத்துப் பிடித்து வளைத்தும், உடல்களை போட்டு நொறுக்கி அள்ளியும் மிகக் கொடூரமாக பயிற்சி அளிக்கிறார்கள் சீனாவில்.
ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும், சிறார்களை தேர்வு செய்து அவர்களுக்கு இப்படி கொடூரமான முறையில் பயிற்சி தருகிறார்களாம் சீனாவில். இந்த வயதிலேயே இப்படிக் கடுமையாக பயிற்றுவித்தால்தான், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதால் இப்படி சித்திரவதைப் பயிற்சியாம்.

முன்பு கிழக்கு ஜெர்மனியில்தான் இப்படி சித்திரவதைக் கூடங்கள் போன்ற பயிற்சிக் கூடங்களில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சிறு வயதிலேயே மிகக் கடுமையான முறையில் பயிற்சி அளித்து உருவாக்கி வந்தனர். ஆனால் அதேபோன்ற சித்திரவதைப் பயிற்சிக் கூடங்கள் சீனாவிலும் இருப்பதாக தெரிய வந்திருப்பது அதிர வைப்பதாக உள்ளது.
ராணுவத்தில் கூட இப்படி கொடுமையான முறையில் பயிற்சி தர மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பயிற்சிப் பள்ளியில் சிறார்களை போட்டு துவம்சம் செய்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளி ஒன்றில்தான் தற்போது தங்கம் வென்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள யே ஷிவானும் நீச்சல் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான பயிற்சியின் மூலம் மோல்ட் செய்யப்பட்ட பொம்மை போலத்தான் யே ஷிவான் உள்ளிட்ட சீன விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உலகம் தற்போது பார்க்கிறது. மேலும் நீச்சல் போட்டிகளில் சீனா சமீ்ப காலமாக ஏகப்பட்ட முறைகேடுகளைச் செய்துள்ளதும், யே ஷிவான் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துவதாக விளையாட்டுத்துறையினர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர்.
ஷிவானைப் பார்த்தாலும் கூட ஒரு பெண்மைக்குரிய விஷயங்கள் அவரிடம் குறைவாகவே உள்ளன. இறுகிப் போன உடம்பு, சுவர் போல ஒரு உருவம், அகன்ற புஜங்கள், உருண்டு காணப்படும் தொடைகள் போன்றவற்றைப் பார்க்கும்போது மிகக் கடுமையான உடற் பயிற்சி பெற்றவரைப் போலவே தெரிகிறது.

ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை முன்பெல்லாம் அமெரிக்கா, சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி ஆகியவைதான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. இதை உடைத்து உள்ளே புகுந்த நாடுதான் சீனா. இந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் கூட சீனாதான் பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் பத்து வருடங்களுக்கு முன்பு சீன இரும்புத் திரை அரசு போட்ட அதிரடி திட்டங்கள்தான் காரணம். சாம்பியன்கள் அவர்களாக உருவாக மாட்டார்கள், நாம்தான் உருவாக்க வேண்டும் என்ற அந்த அடிப்படைத் திட்டத்தால்தான் சீன வீரர்களும், வீராங்கனைகளும் இன்று சர்வதேச அளவில் பளிச்சிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதன் பின்னணியில் பகீர் பயிற்சி முறைகள் இருப்பதுதான் நெஞ்சை உறைய வைக்கின்றன.
நாடு முழுவதும் விளையாட்டுப் பயிற்சிக்காகவே 3000 புதிய பயிற்சி மையங்களை சீன அரசு திறந்துள்ளது. இவை ராணுவ முகாம் போல உள்ளன. அந்த அளவுக்கு இங்கு கடுமையான பயிற்சி முறைகள் தரப்படுகின்றன.
பள்ளிகளில் படித்து வரும் சிறார்களிடம், விளையாட்டு ஆர்வம், திறமை இருந்தால் அது குறித்து அந்தந்த பிராந்திய பயிற்சியாளர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். உடனே அப்படிப்பட்ட குழந்தைகளை பயிற்சியாளர்கள் தூக்கிக் கொண்டு போய் முகாமில் சேர்த்து விடுவார்கள். பயிற்சி மையத்தில் அவர்களுக்குக் கடுமையான பயிற்சி அளிப்பார்கள். இது கட்டாயப் பயிற்சியாகும். பிடிக்கிறதோ, இல்லையோ சேர்ந்தேயாக வேண்டும்.
இப்படித்தான் யேவும் ஒரு பயிற்சி முகாமில் தனது 7வது வயதில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் குயிங் டிங்யி கூறுகையில், தனது 7 வயதில் நீச்சல் வீராங்கனையாக வேண்டும் என்று எனது மகள் விரும்பினாள். இதையடுத்து பயிற்சி மையத்தில் அவள் சேர்க்கப்பட்டாள். முதலில் அவளது உயரத்தைப் பார்த்து தடகளப் போட்டிகளுக்கு அவளைப் பரிந்துரைத்தனர். பின்னர் நீச்சலுக்கு மாற்றினர் என்றார்.
பயிற்சி முகாமில் யே சேர்ந்தவுடனேயே அவரை சென் ஜிங்குலின் ஸ்போர்ட்ஸ் பள்ளிக்கு மாற்றினர். அங்குதான் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடுமையான பயிற்சியின் விளைவாக 11 வயதிலேயே ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார் யே.
இந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சி முறைகள் கிட்டத்தட்ட சித்திரவதைக்குச் சமமானதாகும். குறிப்பாக ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளை போட்டு வதைக்கும் முறையைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வரும்.

மிகவும் சிறிய வயதிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார்களாம். அங்கு அவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சி தரப்படுகிறது. கைகளை வளைப்பது, கால்களை வளைப்பது, உடலை முறுக்குவது என பயிற்சி தரப்படுகிறது. இதற்காக, கை, கால்களை பயிற்சியாளர்கள் வளைக்கும்போது அந்தக் குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
சரியாகச் செய்யாமல் அழும் குழந்தைகளுக்குப் பயிற்சியாளர்கள் சரமாரியாக அடிக்கிறார்களாம்.
இதுகுறித்து ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்குப் புகார்களும் போயுள்ளன. ஆனால் அதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த சித்திரவதைப் பயிற்சி முகாம்கள் குறித்த புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனக் குழந்தைகளை ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளுக்குத் தயார் படுத்த எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்ற விவரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.
தற்போது அதீத வேகத்தில் நீச்சலடித்து, தங்கம் வென்று அனைவரையும் வியக்க வைத்துள்ள யே எப்படிப்பட்ட சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது தெரியவில்லை.

(தட்ஸ்தமிழ்)

Friday, July 6, 2012

சவ்ரவ் கங்குலி(பெங்கால் டைகர்)-பிறந்த நாள் சிறப்புப் பகுதி



இந்திய கிரிக்கெட் அணியை உலக அரங்கில் தலைநிமிர வைத்த பெருமை நம் தாதா சவுரவ் கங்குலியைச் சாரும்.1972ஆம் வருடம் ஜுலை 8ம் தேதி கொல்கத்தாவில் பிறந்த ஒரு குழந்தை அடுத்த 30 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைக்கும் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.1992ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி கிரிக்கெட் உலகில் கங்குலி அறிமுகம ஆனார்.தான் கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறேன்.தண்ணீர் பாட்டில்களை சுமப்பதற்க்கு அல்ல என அப்போது வெளியிட்ட கருத்தால் அடுத்த 4 ஆண்டுகள் கிரிக்கெட் உலகம் அவரைப் புறக்கணித்தது. மீண்டும் 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லாட்ஸில் அறிமுக டெஸ்டில் சதம் கண்டு அசத்தினார்.இவருடைய சாதனைகளையும் சிறப்புகளையும் எழுத இந்த ஒரு பகுதி போதது என்பதால் 40ஆவது பிறந்த நாளுக்கு 40 சாதனைகளும் சிறப்பம்சங்களும் இங்கே தொகுத்துள்ளேன். 

இவருடைய சாதனைகளும் சிறப்பம்சங்களும்:

1.அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்களில் ஒருவர்.
2.ஒருநாள் போட்டியில் அதிவேக 7000,8000,9000 ரன்களை கடந்தவர்.
3.ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் உலக      அரங்கில் 3ஆவது வீர்ர்.
4.ஒருநாள் போட்டியில் 22 சதங்களில் 18 அந்நிய மண்ணில் அடித்தவர்.
5.உலகின் 6ஆவது தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர் என விஸ்டனால் புகழாரம் சூட்டப்பட்டவர்.
6.கங்குலியும்,டிராவிட்டும் இணைந்து குவித்த 318 ரன்கள் உலகக் கோப்பையில் எந்த ஒரு விக்கெட்டுக்கு இடையில் குவிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்னாகும்.
7.ஒருநாள் போட்டியில் 10000 ரன் மற்றும் 100 விக்கெட் மற்றும் 100 கேட்ச் எடுத்த 3 வீரர்களில் ஒருவர். 





8.ஒருநாள் போட்டியில் 2 முறை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
9.ஒருநாள் போட்டியில் இதுவரை 190 சிக்சர்களை விளாசியுள்ளார்.
10. ஒரே உலகக் கோப்பையில் 3 சதம் அடித்த வீரர்களில் ஒருவர்.
11.உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்களில் ஒருவர்.
12. 31முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

13.தொடக்க ஆட்டக்காரராக கங்குலியும் சச்சினும் 26 முறை 100+ ரன்களை எடுத்துள்ளனர்.
14. தொடக்க ஆட்டக்காரராக கங்குலியும் சச்சினும் அதிக ரன்களை குவித்துள்ளனர்.
15.சச்சின் மற்றும் டிராவிட்டுடன் இணைந்து 5 முறை 200+ ரன்களை குவித்துள்ளார்.
16.கங்குலி சதமடித்த எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் இந்தியா தோற்றதில்லை.

17.1997,1999,2000 ஆகிய வருடங்களில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்தவர்.
18.ஐ.சி.சியின் ஒருநாள் போட்டிக்கான தரம் பெற்ற அனைத்து நாடுகளுடனும்(வெஸ்ட் இண்டீஸ் தவிர) சதம் அடித்துள்ளார்.
19.ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார்.


20.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இதுவரை 38 சதம் அடித்துள்ளார்.
21.முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 3 வீரர்களில் ஒருவர்.
22.2000ஆம் ஆண்டு அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபோது பல வீரர்கள் அனுபவமில்லாமலும்,புதுமுகமாகவும் இருந்தனர்.
23.சேவாக்,யுவ்ராஜ்,ஜாகீர்கான் ம்ற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இவரால் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.
24.இவருடைய தலைமையின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் 16 டெஸ்ட் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
25.2000 ம்ற்றும் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி டிராபியின் இறுதிப்போட்டிவரை அணியை அழைத்து சென்றார்.
26.இவருடைய தலைமையின் கீழ் 2000-01ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக கொல்கத்தாவில் பெற்ற வெற்றி இன்றுவரை உலகின் தலைசிறந்த டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
27.2002ஆம் ஆண்டு லாட்ஸில் நடைபெற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியின் வெற்றிக்களிப்பில் தனது டி-சர்ட்டை கழற்றி ரசிகர்களை  நோக்கி எறிந்ததை எந்த இந்திய ரசிகனும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டான்.
28.2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.


29.நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு  பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இவரின் தலைமையின் இந்திய அணி வென்றது.
30.கேப்டனாக 49 டெஸ்ட் போட்டியில் 21 போட்டியில் அணிக்கு வெற்றி தேடித்தந்து தன்னை உலகின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டனாக முத்திரை பதித்து கொண்டார்.
31.அதிக அனுபவம் மற்றும் வெற்றிகரமான கேப்டன்களில் இவரும் ஒருவர்.
32.இவருடைய தலைமையின் கீழ் இந்திய அணியை ஒரு துடிப்புமிக்க போர்ப்படையைப்  போல எதிரணியினர் கருதினர்.  
33களத்தில் எப்போது துடிப்புள்ள வீரராக செயல்படுவார்.
34.அதிரடி ஆட்டக்காரர் யுவ்ராஜ்சிங் "கங்குலி தலைமையின் கீழ் தான் சாகவும் தயார்"என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
35."மீண்டும் எழுந்து வருதல்"(come back) என்ற இவருடைய எழுச்சி பல வீரர்களுக்கு முன் உதாரணம். 


36."இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஐந்து அல்லது அத்ற்கு மேலே வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவர்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியும்"என்ற கூற்றில் உறுதியாக உள்ளவர்.
37."கிரிக்கெட்டின் ஆப்-சைடின்(off-side)கடவுள்" என்று இவர் வர்ணிக்கப்படுகிறார்.எத்தனை வீரர்களை ஆப்-சைடில் நிற்க வைத்தாலும் அவர்களை தாண்டி எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை அனுப்புவதில் அவருக்கு நிகர் அவரே.
38.இவரை ரசிகர்கள் செல்லமாக "கிரிக்கெட்டின் தாதா" என்று அழைப்பார்கள்.
39.இவரின் செல்லப்பெயர்கள்
     *.கொல்கத்தாவின் இளவரசர்
     *.கிரிக்கெட்டின் மஹாராஜா
     *.பெங்கால் டைகர்
     *.எழுவதில் மன்னன்(king of come back)
     *.இந்திய கிரிக்கெட்டின் வழி
40. 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அப்துல்கலாம் அவர்களால் வழங்கப்பட்டது.




சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றறாலும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.வாழ்க தாதா பல்லாண்டு..




                                                                       Love you DADA
                                                                                                        
                                                                               Vels















Friday, June 29, 2012

இவர்களில் யார் அடுத்த நிதியமைச்சராகலாம்?


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார்.
இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது.
நிதித்துறையில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடுவதோடு, அன்னிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதோடு ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தும் திறமையும் கொண்ட ஒருவர் தான் இப்போதைய தேவை. அதே நேரத்தில் நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் காங்கிரசின் ஓட்டு வங்கியும் பாதிக்கப்படாத வகையில் நேக்கு போக்காக அரசியலையும் நிதி விவகாரங்களையும் கவனமாகக் கையாளும் திறன் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார்.
அதில் முதல் சாய்ஸ் பிரதமர் மன்மோகன் சிங் தான்.
ஆனால், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்க முடியாத அளவுக்கு அவருக்கு ஏராளமான பணி நெருக்கடி. இதனால், வேறு ஒருவரை நிதியமைச்சராக்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது.
ப.சிதம்பரம்:

அடுத்த சாய்ஸாக இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அடிப்படையில் வழக்கறிஞரான சிதம்பரத்துக்கு நிதி நிர்வாகம் அத்துப்படியான விஷயம். 2004-2008ம் ஆண்டில் இவர் நிதியமைச்சராக இருந்கபோது தான் நாடு 9 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
சர்வதேச பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோதும், நிலைமை சமாளித்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்து காட்டினார்.
ஆனால், அதே காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்களால் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் மீது கடும் கோபம் கொண்ட சோனியா அவரை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
உள்துறையை கொஞ்சமாவது செயல்படும் துறையாக மாற்ற ப.சிதம்பரமே சரி என்று மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்து அவரை உள்துறை அமைச்சராக்கினர்.
உள்துறை அமைச்சராக ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவே உள்ளன. கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. மாதிரி தான் உள்துறையை கையாண்டு வருகிறார் சிதம்பரம். தினமும் ஐ.பி உள்ளிட்ட உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை, வாரந்தோறும் உள்துறை-உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் கூட்டாக ஆலோசனை, கிடைக்கும் ரகசிய தகவல்கள் வெளியே லீக் ஆகிவிடாமல் கட்டிக் காத்து உடனடி நடவடிக்கைகள் எடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிதம்பரத்தின் பங்கு மிகச் சிறப்பாகவே உள்ளது.
இதற்கு முன் இந்தத் துறையை கையாண்ட சிவராஜ் பாட்டீல் அந்தத் துறையை சீரழித்து வைத்த நிலையில், அதை சரி செய்யவே சிதம்பரத்துக்கு நெடு நாட்கள் பிடித்தன. இப்போது அந்தத் துறையிலிருந்து சிதம்பரத்தை மாற்ற சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் விருப்பமில்லை என்கிறார்கள்.
இதனால், சிதம்பரம் நிதியமைச்சராகவது சாத்தியமில்லை.
ஆனந்த் சர்மா:

வர்த்தகத்துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவை 3வது சாய்ஸாக பார்க்கிறார்கள். மிகச் சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சர்மாவுக்கு பிடித்த துறை வெளியுறவுத்துறை தான். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக வர்த்தகத்துறைக்கு அமைச்சராக்கினர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.
அவரும் அந்தத் துறையை நன்றாகவே நிர்வகித்து வருகிறார். தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளரான சர்மா சர்வதேச அளவில் நிதி நிலைமை சரியில்லாதபோதும் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருபவர்.
சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்களில் அதீத ஆர்வம் கொண்ட இவர் கடுமையான உழைப்பாளி. ஆனால், நிதித்துறையை நிர்வகிக்கும் அளவுக்கு இவரிடம் திறமை உள்ளதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
சி.ரங்கராஜன்:

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான சி.ரங்கராஜனுக்கு உடம்பெல்லாம் பொருளாதார மூளை தான். இப்போதும் காலையில் தினமும் பிரதமர் நாட்டின் நிதி விஷயங்களை விவாதிக்கும் முக்கிய நபர் ரங்கராஜன் தான்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது தான் இந்திய நிதி நிலைமை நல்ல நிலைக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுத்துத் தான் பணவீக்கம், பெட்ரோல்-டீசல் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அது தவறு என்று சொல்பவர். மானியங்களுக்கு எதிரானவர்.
தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர். ஆனால், அரசியல் பின்புலம் இல்லாதவர். அரசியல்ரீதியாக நிதி விவகாரங்களை பார்க்க மறுப்பவர். ஓட்டு அரசியல் இவருக்குத் தேவையில்லை. ஆனால், காங்கிரசுக்குத் தேவையாச்சே!.
மான்டேக் சிங் அலுவாலியா:

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங்கை நிதியமைச்சராகவும், ப.சிதம்பரத்தை வர்த்தகத்துறை அமைச்சராகவும் வைத்துக் கொண்டு தான் பல மாயாஜாலங்களைச் செய்தார். இந்த டீமுக்கு முதுகெலும்பாக இருந்தவர் மான்டேக் சிங் அலுவாலியா.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வலது கரமான இவர் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக உள்ளார். இவரும் சி.ரங்கராஜன் மாதிரியே முழு பொருளாதார வல்லுனர் தான். அரசியல்வாதி இல்லை.
இதனால் நாட்டுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிடும் இயல்புடையவர். மானியங்களை கட்டுப்படுத்தி அரசின் செலவைக் குறைத்து, அந்தப் பணத்தை நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தச் சொல்பவர். பெட்ரோல், டீசலை விலையை மானியத்தைக் கொடுத்து குறைக்க வேண்டியதில்லை என்பவர்.
இவர் சொன்னதில் பல விஷயங்களை மன்மோகன் சிங்கால் கேட்க முடியவில்லை. காரணம், அரசியல். இவர் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தால் இப்போது நாடு சந்திக்கும் பல பொருளாதார நெருக்கடிகள் வந்தே இருக்காது.
இவர் நிதியமைச்சரானால் பங்குச் சந்தைகளில் பணம் புரண்டோடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுக்கள் அல்லவா புரண்டு ஓட வேண்டும்...
ஜெய்ராம் ரமேஷ்:

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் எல்லோருக்குமே நண்பர். முதலீட்டாளர்களுக்கு ஆதரவான, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவான நபர் தான் என்றாலும் பக்கா அரசியல்வாதி.
கடந்த 2 முறையும் மத்தியில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். சோனியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பாஜக ஆட்சியின் கடைசி ஆண்டில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது, 'இந்தியா ஒளிர்கிறது' என்று ஒரு போலி பிரச்சாரம் முன் வைக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் செலவில் டிவி, பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தபோது அதை சமாளிக்க சோனியாவால் உத்தரவிடப்பட்ட நபர் ஜெய்ராம்.
''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'' (காங்கிரசின் கை எப்போதும் சாதாரண மக்களுடனே கைகோர்த்து நிற்கும்.. இது எனக்குத் தெரிந்த இந்தி translation) என்ற பதிலடி விளம்பரத்தை ஜெய்ராம் ரமேஷ் தான் முன் வைத்தார்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் கடுப்பில் இருந்த மக்களுக்கு பாஜகவின் India is shining, Feel good factor (Feel good ஹோரகா ஹை.. ஹம் feel great factor லாங்கே...) என்று பிரமோத் மகாஜனும், வெங்கய்யா நாயுடுவும் டிவியில் மாறி மாறி பேசி வெறுப்பேற்றி வந்த நிலையில், மிக அமைதியாக முன் வைக்கப்பட்ட ''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'' கோஷம் ஏழைகளை காங்கிரஸ் பக்கமாகத் திருப்பியது.
இதையடுத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் பிரச்சாரத்துக்குத் தலைமை தாங்கினார் ரமேஷ். இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.
கையை மடித்துவிட்ட வெள்ளை ஜுப்பா, நுனி நாக்கு ஆங்கிலம், அலைபாயும் வெள்ளை முடி, லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் முன்னோடி, பஞ்சாயத்து ராஜ் விவகாரங்களிலும் சர்வதேச பொருளாதார விவகாரங்களிலும் அலாதி ஆர்வம், சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்களில் தீவிர ஞானம், சுற்றுச்சூழல் விவகாரங்களில் எந்த நாடுடனும் மோதும் திறன் என எல்லாம் தெரிந்த, எல்லாம் கலந்த மேதாவி தான் ஜெய்ராம் ரமேஷ்.
அரசியலும் தெரியும், டெக்னாலஜியும் தெரியும், நிதி விவகாரங்களும் அத்துப்படி.
ஆனால், ஓவராக ரூல் பேசுவார். சட்டப்படி தான் எல்லாம் என்பார். தவறு செய்தால் சொந்தக் கட்சி முதல்வரையே விமர்சிப்பார், நல்லது செய்யும் எதிர்க் கட்சி முதல்வரை வெளிப்படையாகவே பாராட்டுவார்.
இந்தியாவில் ரூ 60,000 கோடியை நிலக்கரித்துறையில் முதலீடு செய்ய வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் விதிகளைக் காட்டி ஏராளமான தடைகளைப் போட்டார் ரமேஷ். இதனால் இவர் மீது முதலீட்டாளர்களுக்கு கோபம் உண்டு.
இவரது செயல்களால் கடுப்பான பிரதமர் இவரை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றினார். ஆனால், அதிலும் தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.
கார்களுக்கான டீசல் விலையைக் குறைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளவர். இவர் நிதியமைச்சரானால் ஒன்று டீசல் மீதான வரி உயரும் அல்லது டீசல் கார்கள் மீதான வரி உயரும் அல்லது இரண்டுமே நடக்கும்!.
கார் நிறுவனங்கள் இவரை நிதியமைச்சராக்க விட்டுவிடுவார்களா?






Sunday, May 6, 2012

மூன்றாவது உலகப் போரின் விளிம்பில் உலக நாடுகள்


ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.ஆதரவு மற்றும் எதிரான நாடுகள் இலங்கை தீர்மானத்தின் அடிப்படையிலானவை என்று நினைக்க வேண்டாம்.இப்படி உலக நாடுகள் இரு தரப்பாக பிரிந்து நிற்பதற்க்கு காரணம் இலங்கைத் தமிழ்ர் பிரச்சினையையும் தாண்டிய உலகளாவிய பிரச்சினை

இந்த உலகளாவிய பிரச்சினை:அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் பனிப்போர்.இதன் உச்சகட்டம் 3வது உலகப்போர் அல்லது உலகின் பல பகுதிகளில் சிறு சிறு போர்கள்.
                                                      ----------------
1922ல் ரஷ்யா தலைமையில் சோவியத் யூனியன் உருவாகிய போது உலக நாடுகள் இரு அணிகளாய் பிரியத் துவங்கின.சோவியத் யூனியன் தலைமையில் ஒரு அணி,அமெரிக்கா தலைமையில் இன்னொரு அணி.1991ல் சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறியதால் அதன் பொருளாதார,அரசியல் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.இந்த நேரத்தில் அமெரிக்காவின் தலைமையிலான அணி விரிவடைந்து,அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்தது.சோவியத் யூனியன் சிதறியதால் உலக அரசியலில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப சீனா அசுர வேகத்தில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பல முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தது.சீனாவின் இந்த பாய்ச்சலை உன்னிப்பாக கவனித்த அமெரிக்கா நெருக்கம்,ஒதுங்கல்,எதிர்ப்பு என மூன்று விதமான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கூட்டணி நாடுகள் முயன்று வருகின்றன.
சுருங்கச் சொன்னால் அமெரிக்கா உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைத் தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறது.சீனா உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைக் கைப்பற்றப் போராடிக் கொண்டிருக்கிறது.இந்த போராட்டங்கள் தான் இந்த இருநாடுகள் இடையில் நடந்து வரும் பனிப்போரின் பின்னனி.இந்த போராட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நாடுகளில் சாதகங்களையும் பாதகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆசிய நாடுகள்:இந்தியா,இலங்கை,சீனா



இலங்கையில் தமிழீன படுகொலைப் படுகொலையை நடத்திய ராஜபக்ஷேவின் அரசுக்கு இந்த துணிச்சல் வந்தது எப்படி?எல்லாமே சீனாவின் பக்கப்பலம்தான்.
இலங்கையுடன் சீனா இந்த திடீர் நெருக்கத்தை வளர்த்தது ஏன்?

முதல் காரணம்:சீனாவைப் போல் இந்தியா மிகப்பெரிய நாடு.ஆசிய அரசியலில் சீனாவின் ஏகாபத்தியம் ஏற்படுவத்ற்கு இந்தியா ஒரு தடைக்கல்லாக இருந்து வருகிறது.

இரண்டாவது காரணம்:அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருந்து வருகிறது.அணிசேரா நாடுகள் அமைப்பில் இந்தியாவுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருந்து வருகிறது.(அணிசேரா நாடுகள் என்பது சோவியத் யூனியன் உருவாகியபோது ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சாராத நாடுகள் உருவாக்கிய அமைப்பு தான் அணிசேரா நாடுகள்).இது சீனாவின் 'உலகின் நம்பர் 1 நாடு' என்ற லட்சியத்தை நிறைவேற்றத் தடைக்கல்லாக இருக்கிறது.
இந்த தடைக்கல்லை உடைக்க வேண்டுமானால்,இந்தியாவை சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தாத வகையில் அதன் உள்நாட்டு விவகாரங்களிலே திணறடிக்க வேண்டும் என்பது சீனாவின் ராஜதந்திரம்.



இதற்காக,
வங்கதேசம்,மியான்மர்,நேபாளம்,பாகிஸ்தான் என இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுடன் சீனா நெருக்கத்தை வளர்த்துக் கொண்டது.இதன்மூலம் நிலப்பகுதியில் இந்தியாவைச் சுற்றி சீனா 'செக்' வைத்துள்ளது.
இதுபோல் கடல்பகுதியில் 'செக்' வைக்க முடியாமல் சீனா திணறி வந்தது.கடல்பகுதியில் 'செக்' வைக்க வேண்டுமாயின் இந்தியப் பெருங்கடலில் உள்ள இலங்கை மற்றும் மாலத்தீவுடன் சீனா நெருங்கியாக வேண்டும்.இதற்கான ராஜதந்திரத் திட்டத்தின் முதல்கட்டமாகத் தான் இலங்கையுடன் சீனா நெருங்கியது.
'புலிகளின் ஆட்சியை ஒடுக்க உதவுகிறோம்.இலங்கையின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுகிறோம்.அதற்குப் பதிலாக,இலங்கையின் அம்பந்தோட்டாத் துறைமுகத்தை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்'என ராஜபக்சே அரசுடன் சீனா பேசி முடித்தது.
'சீனாவுடன் நெருங்க வேண்டாம்,புலிகளுடன் சமரச தீர்வு ஏற்படுத்த நாங்கள் உதவுகிறோம்'என இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியிருக்க வேண்டும்.ஆனால் இந்த அணுகுமுறை மத்திய அரசிடம் இல்லாமல் போனது இனப்படுகொலைக்கு காரணமாக மாறியதோடு,இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது.
சரியான அணுகுமுறைக்குப் பதிலாக'புலிகளை ஒழிக்க நாங்களும் உதவுகிறோம்' என மத்திய அரசு பின்பற்றியது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.சீனாவுடன் நெருங்கி விடுவோம் என்ற பயத்தை உருவாக்கி தனது இனப்படுகொலையை நிறைவேற்றியது இலங்கை அரசு.இந்தியாவும் இலங்கைப் பக்கம் நின்றதால் அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளால் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.போர் முடிந்தபின் இந்தியாவுக்கு இலங்கை 'டாட்டா' காட்டிவிட்டு மீண்டும் சீனாவுடன் நெருக்கமாகி விட்டது.இலங்கையின் கடலோரப் பகுதிகள் சீனாவின் கடற்படைத்தளங்கள் போல் மாறி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.இதேபோல் கடல்பகுதியில் அடுத்த 'செக்' நடவடிக்கையும் சீனா சமீபத்தில் நிறைவேற்றியது.
இந்தியாவின் மிகப்பெரிய நட்புநாடாக,இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு இருந்து வந்தது.சீனா இந்த நாட்டையும் வளைத்து விட்டது.சமீபத்தில் அங்கு ஏற்பட்ட புரட்சியில் அதிபர் நசீத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு,துணை அதிபராக இருந்த வாகித் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.இந்த புரட்சியின் பின்னனியில் இருந்தது சீனாதான்.இப்படி நீரிலும் நிலத்திலும் ராஜதந்திர வலையால் இந்தியாவை சீனா சுற்றி வளைத்துவிட்டது.இந்த வலையை அறுத்தெடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டணிகளின் முயற்சி:



-->சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் மியான்மரை,அமெரிக்கக் கூட்டணி நாடுகள் மெல்ல மெல்ல வளைத்து வருகின்றன.அங்கு இராணுவ ஆட்சி இருந்தது.கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்த மியான்மர் அரசிடம்,ஜனநாயக ஆட்சியை அமல்படுத்தினால் பொருளாதார நிதியுதவி தாரளமாக வழங்கப்படும் என அமெரிக்க கூட்டணி நாடுகள் கூறியுள்ளன.இதை அந்நாட்டு அரசும் ஏற்று பாதி ஜனநாயக அரசை ஏற்படுத்தியுள்ளது.தற்போது ஆங்க் சாங்க் சூ கியும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது சீனாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-->சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் அமெரிக்கா தனது கடற்படை தளத்தை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டது.இது சீனாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் கோக்கோஸ் தீவிலிருந்து எளிதாக சீனா உரிமைக்கோரி வரும் எண்ணெய் வளமிக்க தென்சீனக் கடலை எளிதாக கண்காணிக்க முடியும்.ஏற்கனவே தென்சீனக்கடலின் தீவுகள் பலவற்றுக்கு உரிமைக்காக பிலிப்பைன்ஸ்,மலேசியா,வியட்னாம் என தனது அண்டை நாடுகள் பலவற்றுடன் சீனா முரண்பட்டு நிற்கிறது.தற்போது அமெரிக்காவும் தன் பங்குக்கு த்னது படைகளை ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் நிறுத்தியுள்ளது.வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள்கள் கொண்டு வரப்படும் மிக முக்கியமான மலாக்கா நீரிணையை எளிதாக கோக்கோஸ் தீவிலிருந்து கண்காணிக்க முடியும்.எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே போர் அல்லது ஒரு பதற்ற நிலை உருவானால் மலாக்கா நீரிணையை போர்க்கப்பல்கள் வழிமறித்தாலே சீனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் வகையில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது.
-->பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்க அமெரிக்கா மறைமுகமாக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.மேலும் அமெரிக்கா இந்திய பெருங்கடலில் அனைத்து பகுதிகளையும் சீனாவுக்கு எதிராக தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு வருகிறது.எனவே சீனா பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்தி பலுசிஸ்தானின் கவ்தார் துறைமுகத்திலிருந்து வளைகுடா நாடுகளின் எண்ணெய் பொருட்களை தொடர்வண்டி மூலமாகக் சீனாவுக்கு கொண்டு செல்ல இரகசியமாக பணிகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தவும் முனைந்துள்ளது.இதனால்தான் அமெரிக்கா பலுசிஸ்தானை தனி நாடாக்கி ஐ.நா சபையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர முயல்கிறது.இதன்மூலம் பாகிஸ்தானை அதன் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் திருப்பி விடவும் செய்துள்ளது.
-->இந்தியா எதிராக சீனா செயல்படுவதால் அமெரிக்காவுடன் இந்தியா கைக்கோர்த்துள்ளது.இந்தியாவின் இந்த நெருக்கம் சீனாவை அமெரிக்காவிற்க்கு எதிரான விவகாரங்களில் விலகியே நிற்க வைக்கிறது.

சர்வதேச அரங்கில்...



சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெறுவதற்காக ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறது.ஆப்ரிக்க நாடுகளுடன் வைரச்சுரங்க ஒப்பந்தம்,தாதுச்சுரங்க ஒப்பந்தங்களைச் செய்த சீனா வளைகுடா நாடுகளுடன் எண்ணெய் இறக்குமதி மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியையும் செய்து கொண்டுள்ளது.இதோடு ஆப்ரிக்க நாடுகள் தங்கள் சர்வதிகார ஆட்சியை தொடர ஆயுதங்கள் மற்றும் போர்ப்பயிற்ச்சிகளையும் வழங்கி வருகிறது.சீனாவின் இந்த இராஜதந்திர நடவடிக்கைகளை அமெரிக்கக் கூட்டணி நாடுகள் இராஜதந்திர நடவடிக்கைகளால் முறியடித்து வருகிறது.

சமீபத்தில்,துனிஷியா,லிபியா,எகிப்து ஆகிய நாடுகளில் மக்கள் புரட்சியால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.சிரியாவிலும் புரட்சி உச்சக் கட்டமாகியுள்ளது.வடகொரியாவுடன் சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமாக இருந்து வருகின்றன.வடகொரியாவில் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாட்டை நீக்க உதவுவதாகவும்,அதற்கு பதிலாக தென்கொரியாவுடன் மோதல் போக்கைக் கைவிட வேண்டும்,அணுஆயுதப் போட்டியை கைவிட வேண்டும் என அமெரிக்க கூட்டணி நாடுகள் கூறியதை வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளது.

தைவான் மற்றும் ஜப்பானுடன் சீனாவுக்கு பரம்பரை பகையுள்ளது.இந்த இரு நாடுகளும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் வேகமாக நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.வியட்னாமுடன் ஒருகாலத்தில் நட்பாக இருந்த சீனா,தென்சீனக் கடல்ப்பகுதி உரிமையில் மோதல் போக்கைத் தொடங்கியுள்ளது.இந்த விவகாரத்தில் வியட்னாமை அமெரிக்கக் கூட்டணி நாடுகள் ஆதரித்து வருகின்றன.
-----------------------
முடிவாக.....



அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் அதிரடி நடவடிக்கைகளால் பல பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக முதலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தால் ,இலங்கைத் தமிழருக்கான மறுவாழ்வு நடவடிக்கையும்,இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதையும் தடுக்கும் நடவடிக்கையும் மிக வேகமாக செயல்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கும்.ஒருவேளை திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தால்,அதை செயல்படுத்த இலங்கையும்,சீனாவும் முரண்டு பிடித்திருக்கும்.அதன் விளைவாக ஐ.நா. சபை அனுமதியுடன் அமெரிக்கக் கூட்ட்டணி நாடுகள் அதிரடி நடவடிக்கையில் பாய்ந்திருக்கும்.
இந்தியாவின் திருத்தத்தால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது.ஐ.நா சபையின் இலங்கைத் தமிழருக்கான மறுவாழ்வு நடவடிக்கையில் எங்கள் அனுமதி பெற்றாக வேண்டும் என இலங்கை முரண்டு பிடிக்கும்.சீனாவும் அதை ஆதரிக்கும்.இந்த இழுபறி எத்தனை காலத்துக்கு தொடரும் என சொல்ல முடியாது.அமெரிக்காவும் இன்னொரு தீர்மானத்தின் மூலம் சீனாவுக்கும்,இலங்கைக்கும் 'செக்' வைக்கலாம்.
இந்த அதிரடி 'செக்' நடவடிக்கையால் உலகின் பல பகுதிகளிலும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கும்,சீனாவுக்கும் சிறுசிறுப் போர் வெடிக்கலாம்.இந்த சிறுசிறுப் போர்கள் வளர்ந்தால்,3வது உலகப் போரே வெடிக்கலாம்.2வது உலகப் போருக்கு முன்பு இருந்த அதே பதட்டச்சூழல் இப்போதும் தொடங்கியுள்ளது.அன்று ஜெர்மனியின் மேலாதிக்க ஆசை,இன்று சீனாவின் மேலாதிக்க ஆசை என்பது மட்டுமே வித்தியாசம்.2வது உலகப் போரின் விளைவாக,காலணி ஆதிக்க ஆட்சிகளில் இருந்து விடுதலைப் பெற்று பாகிஸ்தான்,இந்தியா என பல புதிய நாடுகள் பிறந்தன.இப்போதைய பதட்டச் சூழல் உச்சக்கட்டத்தை எட்டினால்,பல புதிய நாடுகள்  பிறக்கலாம்.ஒரு வேளைப் போர் உண்டானால் இந்தியா,அமெரிக்காவிற்க்கு எதிராக சீனா கண்டிப்பாக நிற்கும்.அத்துடன் இந்தியாவிற்க்கு தானும் ஒரு உலகசக்தி என்பதை நிருபிக்க சரியான தருணமாக அமையும்.எது எவ்வாறாயினும் போர் உண்டானால் அரசியல்,பொருளாதாரம் என அதன் பாதிப்பு கண்டிப்பாக இந்தியாவிற்க்கு மிகப்பெரிய அளவில் இருக்கும்.



                                                                                           by
                                                                                                    
                                                                                        VELS

Friday, March 23, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வெற்றி யாருக்கு ஆதாயம்?அமெரிக்காவுக்கா?ஈழத்தமிழனனுக்கா?சீனாவுக்கா?



தமிழருக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.ஐ.நா. சபையில் போர்க்குற்றவாளி என இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் ஆதரவுடன் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா வெற்றி பெற்றது.15 நாடுகள் இலங்கையை ஆதரித்தன.8 நாடுகள் நடுநிலையாக எதையும் ஆதரிக்கவில்லை.

ஆதரவளித்த நாடுகள்:

ஆஸ்திரியா,பெல்ஜியம்,பெனின்,கம்ரூன்,சிலி,கொஸ்தாரிகா,செக் குடியரசு,குவாத்தமாலா,ஹங்கேரி,இந்தியா,இத்தாலி,லிபியா,மொரிஷியஸ்,நைஜீரியா,பெரு,போலந்து,மால்டோவா,ரூமேனியா,ஸ்பெயின்,சுவிஸ்,அமெரிக்கா,உருகுவே.

எதிராக வாக்களித்த நாடுகள்:

பங்களாதேஷ்,சீனா,கொங்கோ,கியூபா,ஈக்வடோர்,இந்தோனேசியா,குவைத்,மாலத்தீவு,பிலிப்பைன்ஸ்,கட்டார்,ரஷ்யா,சவுதி அரேபியா,தாய்லாந்து,
உகாண்டா,மௌரித்தானியா.

வாக்களிக்காத நாடுகள்:

மலேசியா,ஜோர்தான்,கிர்கிஸ்தான்,அங்கோலா,செனிகல்,புர்கினா பார்சோ,ஜிபூட்டி,பொட்சுவானா.

அமெரிக்காவின் இந்த வெற்றியால் யாருக்கு ஆதாயம்?
சீனாவுக்கு?
ஈழத்தமிழனனுக்கு?
அமெரிக்காவுக்கு?

சீனாவுக்கு:



ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையைக் காப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.மேலும் தமிழீனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டது.இருப்பினும் இதில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள சற்றே பொறுத்திருந்தேப் பார்த்தது.இலங்கையும் சீனாவின் ஆதரவில் தீர்மானம் எப்படியும் தோற்கடிக்கப்பட்டு விடும்,இந்தியாவும் தம்மை ஆதரிக்கும் என நம்பியது.ஆனால் தீர்மானத்தில் இந்தியா அமெரிக்காவிற்க்கு ஆதரவு தெரிவித்ததால், இதைப் பயன்படுத்தி இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில் சீனா இருந்தது.இதற்காகத் தான் அது இலங்கையைக் காப்பதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டது.இந்தியாவின் இந்த எதிர்நிலையைப் பயன்படுத்தி இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்க்கு எதிராக வலுவாக இலங்கையில் காலூன்ற அது உதவும் சீனாவின் திட்டம்.இதற்காகத்தான் தானே வலிய வந்து இலங்கையை காக்க அது தீவிர முயற்சி மேற்கொள்கிறது.சீனாவின் கடும் முயற்சி காரணமாக ஒற்றை இலக்கத்தில் இருந்த இலங்கையின் ஆதரவு 15 ஆக உயர்ந்தது.24 நாடுகளுக்கு அதிகமாகவே ஆதரவு கிடைக்கும் என சீனா நம்பியது.ஆனால் 8 நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் அவர்களால் வெல்ல முடியவில்லை.இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை அரசு கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியில் உள்ளது.இதுதான் சமயம் என்று சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகள் செய்யக்கூடும்.தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட இது சீனாவுக்கு இலங்கையில் வலுவாக காலுன்ற உதவும்.இதை வைத்து இந்தியாவின் கண்களில் இனி விரலை விட்டு ஆட்டலாம் என்பது சீனாவின் கணக்கு.தீர்மானம் தோற்றாலும் ஜெயித்தாலும் சீனாவிற்க்கு இந்த பிரச்சினை இலங்கையில் வலுவாக காலூன்ற அடித்தளமாக அமைந்துவிட்டது.

அமெரிக்காவுக்கு:



தீர்மானத்தில் வென்றாலும்கூட,சீனாவின் உதவிகளை இலங்கை பெறும் முன்பே தானும் இலங்கை அரசுடன் இணைந்து நல்லிணக்கப் பணிகளில் ஈடுபட தயாராக இருப்பதாகஅறிவித்தது,தீர்மானம் நிறைவேறிய மறுநாளே 1980களில் இலங்கை மீது விதிக்கப்பட்ட ஆயுதக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதன் இரட்டை நிலையைக் காட்டுகிறது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது,நம்பகமான போர் விசாரணையும் இலங்கை அரசு மேற்கொள்ளப்போவதுமில்லை என்பதும் அமெரிக்காவுக்கு தெரியும்.போர்க்குற்றங்களுக்கு பொறுப்பு கூறுவதற்கான எந்த விவகாரங்களிலும் உள்நுழைய அமெரிக்காவிற்க்கு விருப்பமில்லை.ஏனென்றால் இத்தகைய தீர்மானம் ஒன்றின் மூலம் முதற்கட்டமாக இலங்கைக்கு கடிவாளம் ஒன்றைப் போட்டு விடப்போகிறது.அதன்பின்னரும் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால் அடுத்த தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயார் செய்யும்.மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்த்திட்டத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயல்படுத்தவும்,அதற்காக வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் ஆலோசணை உதவிகள் குற்த்த அறிக்கையை 22ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க இலங்கை அரசு நிர்பதிக்கப்பட்டுள்ளது.(இப்போது முடிந்தது 19ஆவது கூட்டத்தொடர்,22ஆவது கூட்டத்தொடர் என்பது 2013 மார்ச்சில் தொடங்கும்.ஓர் ஆண்டில் 3 முறை(மார்ச்,ஜுன்,செப்டம்பர்)கூட்டத்தொடர் நடைபெறும்.)22ஆவது கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு வழங்கப்பட்ட மறைமுகமாக அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கால அவகாசமாகும்.ஆனால் இந்த ஒரு வருட காலத்தில் இலங்கையின் செயற்பாடுகளை அமெரிக்காவோ,சர்வதேச சமுதாயமோ எந்த கேள்வியும் எழுப்ப போவதில்லை.நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இணைந்து செயலாற்றுவது இலங்கைக்கு கடினமானதாக இருக்கும்.ஏனென்றால் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்திட்டங்கள் மறைமுகமாக அமெரிக்காவிற்கு சாதகமாக அமையும்.இந்த ஓராண்டில் இலங்கை அரசுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா இலங்கையில் உள்நுழைய வாய்ப்புண்டு.புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு நடத்திய யுத்தத்திற்கு ஒத்துழைத்த அமெரிக்காவிற்கு ஈராக்,லிபியா மற்றும் ஆப்கானிஸ்தானை விட இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தமாக எந்த அக்கறையும் இல்லை.அமெரிக்காவைப் பொறுத்தவரை, இலங்கை சீனாவுடனான நெருக்கமான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் விலகி நிற்கக் கொடுக்கப்படும் அழுத்தத்திற்க்கு ஒரு உபகரணமே இந்த தீர்மானம்.இதன்மூலம் அமெரிக்காவும் இலங்கையின் மெல்ல மெல்ல காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

ஈழத்தமிழனனுக்கு:



அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும் இதனால் ஈழத்தமிழனுக்கு எந்த ஆதாயமும் இல்லை.தமிழீனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை சர்வதேச கவனத்துக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியே தவிர இதனால் எந்த பலனுமில்லை.இலங்கைக்கு எதிரான தீர்மானம் தமிழர் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அல்ல.முற்றிலும் தமிழரின் விருப்பத்தையும்,நலன்களையும் நிறைவேற்றுவது அமெரிக்காவின் நோக்கமல்ல.அதற்காக போர்க்குற்ற்ங்கள் எல்லாம் மறைக்கப்பட்டு விடும் என்றோ,மறக்கப்பட்டு விடும் என்றோ அர்த்தமல்ல.அதற்கான காலம் இன்னும் வரவில்லை.தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்க்கும் செயல்த்திட்டத்தை நிறைவேற்றவும் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு வருட மறைமுக கால அவகாசத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் நழுவ விடுமானால் அதன்பின்னரே அமெரிக்காவும் அதைச் சார்ந்த நாடுகளும் சர்வதேச விசாரணையைத் துவக்கும்.தீர்மானத்தின் முடிவை எதிர்நோக்கியிருந்த இலங்கை அரசு இதை தனக்கு எதிரான சர்வதேச சதி என்று உள்நாட்டில் பிரச்சாரம் செய்தது.அத்துடன் தனக்கு எதிராக தீர்மானம் அமைந்தால் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இந்த சதி என்று கூறிக்கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் போட்டிருந்தது.தீர்மானத்தை இந்தியா ஆதரித்தாலும் அதன் நோக்கத்தையே சிதைத்துள்ளது இந்தியாவின் இரட்டை நிலையைக் காட்டுகிறது.எவ்வாறெனில்,தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும்போது,"சட்டத்திற்கு முரணான படுகொலைகள் மற்றும் காணாமற்போதல் ஆகியவற்றிற்கு பக்காச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல்,வடக்கிலிருந்து இராணுவத்தை திரும்ப பெறுதல் இன்னும் பலவற்றில் மனித உரிமை மீறப்பட்டமை குறித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகியவற்றை சர்வதேச கவனத்துக்கு கொண்டு வருவதுடன் ஐ.நா மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் உதவியை இலங்கை அரசு ஏற்க வேண்டும்" என்றது. ஆனால் இந்தியா இதில் தலையிட்டு "மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியையும் இலங்கை அரசுடன் கலந்தாலோசித்துவிட்டு அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்" என மாற்றியுள்ளது.இதனைச் சபையில் உடனே இலங்கை தரப்பு ஆதரித்ததாக தெரிகிறது.


கண்டிப்பாக இலங்கையின் அரசியலில் ராஜபக்ஷேவின் அனுமதியின்றி எந்த அசைவும் இருக்காது.தமிழர்களைச் சமாதானப்படுத்தவே இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளது.ஆனால் தீர்மானத்தின் நோக்கத்தை மாற்றி இலங்கையும் காப்பாற்றியுள்ளது.இதனால் சர்வதேச சமுதாயம் ஈழத்தமிழனுக்காக வழங்கும் எந்த தொழில்நுட்ப மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கான உதவியையும் இலங்கை அரசு ஏற்கப் போவதில்லை.இந்தியாவின் கடைசிநேரகைகழுவல்,தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டம் போன்றவை இலங்கை அரசை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.இதனால் கண்டிப்பாக சர்வதேச சமுதாயம் ஈழத்தமிழனுக்காக அளிக்கும் எந்த உதவியையும் ராஜபக்ஷேவின் அரசு நிராகரிக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது.இந்த தீர்மானத்தினால் ஈழத்தமிழனனுக்கு எந்த ஆதாயமும் இல்லை.தமிழீனப் படுகொலையை சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்றதை தவிர வேறு எந்த ஆதாயமும் இல்லை.

முடிவாக,இந்த சர்வதேச சமுதயாத்துக்கு,போரில் கொல்லப்பட்ட 40,000க்கும் அதிகமான மக்களின் உறவுகள்,விதவையாக்கப்பட்ட பெண்கள்,உடல் உறுப்புகளை இழந்தவர்களின் குரல் இன்னும் கேட்கவில்லையோ?போர்முடிந்தபின்பும் ஈழத்தமிழனின் மேல் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறை நடவடிக்கை இன்னும் அவர்கள் சமுதாயத்தை அடையவில்லையோ?ஒரு சமுதாயத்திற்கு எதிராக ஒரு அரசு நடத்திய இனப்படுகொலையை இன்னும் இந்த சர்வதேச சமுதாயம் கண்டுகொள்ளவில்லை.மனித உரிமைமீறல் ..மனித உரிமைமீறல் என்று கூறிக்கொள்ளும் சர்வதேச சமுதாயத்திற்க்கு மனித உரிமைமீறல் என்றால் என்னவென்றே இன்னும் தெரியவில்லையா?

என்றாவது ஒருநாள் ராஜபக்ஷேவும் அவனது கூட்டாளிகளும் சர்வதேச விசாரணைக் கூண்டில் குற்றவாளிகளாக நிற்கப் போகிறார்களோ அன்றுதான் ஈழத்தமிழர்களுக்கு உண்மையான விடிவுக்காலம்.அதுவரைப் பொறுத்திருக்க வேண்டியதுதான்.


BY

Vels

Saturday, March 17, 2012

அமெரிக்கா: ஈழத் தமிழன் மீது காட்டுவது இரக்கமா? தெற்காசியாவில் மேலாதிக்க தொடக்கமா?


ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.சபையின் 19ஆம் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத்தொடரில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன? அமெரிக்கா ஈழத் தமிழன் மீது ஏன் இரக்கம் காட்டுகிறது?
அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன?
ஈழத் தமிழன் மீது இந்தியாவின் நிலை என்ன? 


அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன? 

தென் கிழக்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை முழுவீச்சில் காட்டி வருகிறது.அடுத்து தனது கவனத்தை மேற்குப்பகுதியில் (தெற்கு ஆசியா) திருப்பியுள்ளது.ஆனால் உலக வல்லரசு அமெரிக்காவிற்கு இது பிடிக்கவில்லை.ஏனென்றால் தற்போதைய சீனாவின் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவை மிஞ்சக்கூடும்.மேலும் தனது ராணுவ பலத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.சீனாவின் தற்போதைய நிலை தனது உலக ஆட்சிக்கு கேடு விளைவிக்குமோ? என்ற அச்சம் வேறு அமெரிக்காவுக்கு.

அமெரிக்கா,ஐரோப்பா கண்டங்களில் தனது நட்பு நாடுகளுடன் தனது ஆதிக்கத்தை நிறுத்தி கொண்ட அமெரிக்காவுக்கு ஆப்பிரிக்கா,ஆசியா கண்டங்களில் அவ்வளவு எளிதாக நிறுத்தி கொள்ள முடியவில்லை.முதலில் எண்ணெய் வளம் மிக்க ஈராக்,ஆப்கானிஸ்தான் என தொடங்கி இன்று ஈரான்
வரை மேற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை தொடங்கியுள்ளது.ஆப்பிரிக நாடான லிபியாவின் கடாஃபியை புரட்சிப்படைகள் மூலம் மரணமடைய செய்ததன் மூலம் தனது ஆதிக்கத்தை ஜனநாயக ஆட்சி என்ற முறையில் நிறுத்தியது.அடுத்து தனது கவனத்தை தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் தொடங்கியபோது சீனாவின் ஆதிக்கத்தை மெல்ல உணர தொடங்கியது.

முதலில் பொருளாதார வளர்ச்சியை நிறுத்துவது?மேற்காசியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப் பொருட்களை பெறுவதை முடக்குவது. இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதிஇறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக மேற்காசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம்  கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத் தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால் தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மலாக்கா வழியாக எண்ணையை 1200 கி.மீ. சுற்றி கொண்டு செல்வதையும்,அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கவும் சீனா கடல் வழி மட்டுமல்லாது தரை வழியாகவும் எண்ணையை கொண்டு செல்ல பர்மாவின் கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணையை இறக்கி தரை வழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் வரை எண்ணைய் குழாயை பதித்து வருகிறது.இத்திட்டம் 2013ல் முடியும்.இத்திட்டத்தை தடுக்கும் நோக்கத்துடன் கடந்த டிசம்பர் மாதம் ஹிலாரி கிளிண்டன் பர்மா சென்று ஆங் சான் சூ கியையும் அதிபரையும் சந்தித்து பேசி உள்ளார்.




இந்த நேரத்தில் இலங்கையும் பாகிஷ்தானும் சீனாவுடன் நெருக்கமடைய ஆரம்பித்தன.சீனா தனது ரணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளத்தை இலங்கையில் அமைக்க திட்டம் தீட்டியது. இதற்காக இலங்கைக்கு ஏராளமான நிதியை சீனா கொடுத்தது.சீனாவின் பொருளாதரத்தையும் பலத்தையும் குறைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு இது மிகுந்த ஆத்திரமூட்டியது.அத்துடன் இலங்கையும் சீனாவும் மிகவும் நெருங்கி தெற்கு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இலங்கை உதவியது.உடனே அமெரிக்கா இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பழைய விவகாரங்களை தோண்ட ஆரம்பித்தது.அப்போதுதான் ராஜ பக்ஷெவின் மனித உரிமை மீறலான ஈழத்தமிழனனுக்கு எதிரான போர் துருப்புச்சீட்டகாக சிக்கியது.உடனே அமெரிக்கா ஐ.நா. சபையில் ராஜ பக்ஷேவிற்கு எதிராக 1).தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களைப் பயன்படுத்தியது.2).பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை செல்ல விடாமல் தடுத்தது.3).பாதுகாப்பு பகுதியில் இராணுவத்தை பயன்படுத்தியது.என்ற தீர்மானங்களை சபையில் கொண்டு வந்துள்ளது.இதில் வெற்றி பெறும் முனைப்புடனும் செயல்பட்டும் வருகிறது.இதிலிருந்து அமெரிக்கா தனது சர்வதிகார ஆட்சியை நிலைநிறுத்த மேற்கொள்ளும் ஒரு முயற்சியே தவிர ஈழத்தமிழன் மீது இரக்கமல்ல?.


ஈழத் தமிழன் மீது இந்தியாவின் நிலை என்ன?


அன்றும் சரி இன்றும் சரி ஈழத்தமிழன் மீது இந்தியா அரசாங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை.அன்று போர் நடந்தபோது தனது போட்டி நாடான சீனா எங்கே ஆயுதங்களை கொடுத்து இலங்கையுடன் நெருங்கி விடுமோ? என்ற அச்சத்திலே ஆயுதங்களை கொடுத்தது.கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்பது தெரிந்தும் ஆயுதங்களை கொடுத்துள்ளது இந்தியா.எதற்காக இந்தியா அச்சமடைந்தது?ஒருவேளை சீனா இலங்கையுடன் நெருக்கமாகி தனது இராணுவ தளத்தை அமைத்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய பிரச்சினையாகி விடும்..அதனால்தான் போரின்போது ஆயுதங்களைக் கொடுத்தும்,ஐ.நா. சபையில் 2009ல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து காப்பாற்றியது.
தன்னைவிட சிறிய நாட்டுக்கு ஆயுதங்களைக் கொடுப்பதும்,அதனை ஆதரிப்பதும் ஏன்?..மாற்றம் ஆட்சியில் தேவையா?அண்டை நாடுகளுடான வெளியுறவு கொள்கையில் தேவையா?.
இன்னும் பிறிதொரு நாளில் நிறைவேறப்போகும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை இன்றுவரை மௌனமாகவே உள்ளது.
அமெரிக்காவிற்கு ஆதரவா?இலங்கைக்கு ஆதரவா? என்பதில் இந்தியா
இன்னும் தனது ஆதரவை தெரிவிப்பதில் மௌனம் சாதிக்கிறது.




இலங்கைக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவின் நன்மதிப்பை இழக்க வேண்டியிருக்கும்.ஆனால் அமெரிக்காவோ தீர்மானத்தில் வெற்றி பெற 100 பிரதிநிதிகளை உறுப்பு நாடுகளுடன் பேச களம் இறக்கியுள்ளது.
இன்றைய நிலையில் 22 நாடுகளின் ஆதரவை வெளிப்படையாக பெற்ற அமெரிக்காவிற்கு இன்னும் சில நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது.அமெரிக்காவிற்கு ஆதரவளித்தால் இலங்கை சீனாவுடன் நெருக்கமாகி விடும்.அத்துடன் ஆசிய நாடுகள் சிலவற்றின் நன்மதிப்பை இழக்க வேண்டி இருக்கும்.இந்த நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா சில நிபந்தனைகளை பேரம் பேசி வருகிறது.அதில் குறிப்பாக மன்னார் வளைகுடா எண்ணெய் படிமம் உரிமை.அமெரிக்காவின் நீண்டகாலம் விசுவாசியாக செயல்பட்ட பாகிஷ்தானின் மீதே அது தாக்குதல் நடத்தியது,ஈரானுடனான எண்ணைய் இறக்குமதியை நிறுத்த சொல்லியும் மறுக்கும் பட்சத்தில் ஜுனில் இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி அது ஆலோசிப்பது போன்ற காரணங்களினாலும் இந்தியா தனது ஆதரவில் இன்றளவும் மௌனம் சாதிக்கிறது.இலங்கைக்கு ஆதரவளித்தால் தம்ழ் மக்களின் ஆதரவை இழப்பதுடன்,ஆட்சிக்கான திராவிட கட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டி இருக்கும்.சேனல் 4ன் வீடியோ ஆதாரம் இந்தியாவை ஈழத்தமிழன் பக்கம் திருப்பும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றி பெறுமா?அல்லது இலங்கைக்கு சாதகமாகுமா?
ஈழத்தமிழனுக்கு ஆதரவு இருக்கிறதா? அல்லது என்றுமே நிராகரிக்கப்படுபவனா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.