Friday, August 3, 2012

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல சிறார்களை போட்டு நொறுக்கும் சீனத்து அகோரப் பயிற்சி!



ஒலிம்பிக்கில் மகளிர் 400 மீட்டர் மெட்லி நீச்சல் பிரிவில் 16 வயதேயான சீனாவின் யே ஷிவான் தங்கப் பதக்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதைப் பார்த்து அமெரிக்கா கூட ஊக்க மருந்து புகாரை எழுப்பியுள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சீனாவில் சிறார்களை எந்த அளவுக்கு சித்திரவதை செய்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பது குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
பார்ப்போர் மனங்களை வேதனைக்குள்ளாக்குகிறது அந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர், சிறுமியரின் நிலை. கைகளை முறுக்கியும், கால்களை இழுத்துப் பிடித்து வளைத்தும், உடல்களை போட்டு நொறுக்கி அள்ளியும் மிகக் கொடூரமாக பயிற்சி அளிக்கிறார்கள் சீனாவில்.
ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும், சிறார்களை தேர்வு செய்து அவர்களுக்கு இப்படி கொடூரமான முறையில் பயிற்சி தருகிறார்களாம் சீனாவில். இந்த வயதிலேயே இப்படிக் கடுமையாக பயிற்றுவித்தால்தான், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதால் இப்படி சித்திரவதைப் பயிற்சியாம்.

முன்பு கிழக்கு ஜெர்மனியில்தான் இப்படி சித்திரவதைக் கூடங்கள் போன்ற பயிற்சிக் கூடங்களில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சிறு வயதிலேயே மிகக் கடுமையான முறையில் பயிற்சி அளித்து உருவாக்கி வந்தனர். ஆனால் அதேபோன்ற சித்திரவதைப் பயிற்சிக் கூடங்கள் சீனாவிலும் இருப்பதாக தெரிய வந்திருப்பது அதிர வைப்பதாக உள்ளது.
ராணுவத்தில் கூட இப்படி கொடுமையான முறையில் பயிற்சி தர மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பயிற்சிப் பள்ளியில் சிறார்களை போட்டு துவம்சம் செய்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பள்ளி ஒன்றில்தான் தற்போது தங்கம் வென்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள யே ஷிவானும் நீச்சல் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான பயிற்சியின் மூலம் மோல்ட் செய்யப்பட்ட பொம்மை போலத்தான் யே ஷிவான் உள்ளிட்ட சீன விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உலகம் தற்போது பார்க்கிறது. மேலும் நீச்சல் போட்டிகளில் சீனா சமீ்ப காலமாக ஏகப்பட்ட முறைகேடுகளைச் செய்துள்ளதும், யே ஷிவான் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துவதாக விளையாட்டுத்துறையினர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர்.
ஷிவானைப் பார்த்தாலும் கூட ஒரு பெண்மைக்குரிய விஷயங்கள் அவரிடம் குறைவாகவே உள்ளன. இறுகிப் போன உடம்பு, சுவர் போல ஒரு உருவம், அகன்ற புஜங்கள், உருண்டு காணப்படும் தொடைகள் போன்றவற்றைப் பார்க்கும்போது மிகக் கடுமையான உடற் பயிற்சி பெற்றவரைப் போலவே தெரிகிறது.

ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை முன்பெல்லாம் அமெரிக்கா, சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி ஆகியவைதான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. இதை உடைத்து உள்ளே புகுந்த நாடுதான் சீனா. இந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் கூட சீனாதான் பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் பத்து வருடங்களுக்கு முன்பு சீன இரும்புத் திரை அரசு போட்ட அதிரடி திட்டங்கள்தான் காரணம். சாம்பியன்கள் அவர்களாக உருவாக மாட்டார்கள், நாம்தான் உருவாக்க வேண்டும் என்ற அந்த அடிப்படைத் திட்டத்தால்தான் சீன வீரர்களும், வீராங்கனைகளும் இன்று சர்வதேச அளவில் பளிச்சிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதன் பின்னணியில் பகீர் பயிற்சி முறைகள் இருப்பதுதான் நெஞ்சை உறைய வைக்கின்றன.
நாடு முழுவதும் விளையாட்டுப் பயிற்சிக்காகவே 3000 புதிய பயிற்சி மையங்களை சீன அரசு திறந்துள்ளது. இவை ராணுவ முகாம் போல உள்ளன. அந்த அளவுக்கு இங்கு கடுமையான பயிற்சி முறைகள் தரப்படுகின்றன.
பள்ளிகளில் படித்து வரும் சிறார்களிடம், விளையாட்டு ஆர்வம், திறமை இருந்தால் அது குறித்து அந்தந்த பிராந்திய பயிற்சியாளர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். உடனே அப்படிப்பட்ட குழந்தைகளை பயிற்சியாளர்கள் தூக்கிக் கொண்டு போய் முகாமில் சேர்த்து விடுவார்கள். பயிற்சி மையத்தில் அவர்களுக்குக் கடுமையான பயிற்சி அளிப்பார்கள். இது கட்டாயப் பயிற்சியாகும். பிடிக்கிறதோ, இல்லையோ சேர்ந்தேயாக வேண்டும்.
இப்படித்தான் யேவும் ஒரு பயிற்சி முகாமில் தனது 7வது வயதில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் குயிங் டிங்யி கூறுகையில், தனது 7 வயதில் நீச்சல் வீராங்கனையாக வேண்டும் என்று எனது மகள் விரும்பினாள். இதையடுத்து பயிற்சி மையத்தில் அவள் சேர்க்கப்பட்டாள். முதலில் அவளது உயரத்தைப் பார்த்து தடகளப் போட்டிகளுக்கு அவளைப் பரிந்துரைத்தனர். பின்னர் நீச்சலுக்கு மாற்றினர் என்றார்.
பயிற்சி முகாமில் யே சேர்ந்தவுடனேயே அவரை சென் ஜிங்குலின் ஸ்போர்ட்ஸ் பள்ளிக்கு மாற்றினர். அங்குதான் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடுமையான பயிற்சியின் விளைவாக 11 வயதிலேயே ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்றார் யே.
இந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் பயிற்சி முறைகள் கிட்டத்தட்ட சித்திரவதைக்குச் சமமானதாகும். குறிப்பாக ஜிம்னாஸ்டிக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளை போட்டு வதைக்கும் முறையைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வரும்.

மிகவும் சிறிய வயதிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார்களாம். அங்கு அவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சி தரப்படுகிறது. கைகளை வளைப்பது, கால்களை வளைப்பது, உடலை முறுக்குவது என பயிற்சி தரப்படுகிறது. இதற்காக, கை, கால்களை பயிற்சியாளர்கள் வளைக்கும்போது அந்தக் குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
சரியாகச் செய்யாமல் அழும் குழந்தைகளுக்குப் பயிற்சியாளர்கள் சரமாரியாக அடிக்கிறார்களாம்.
இதுகுறித்து ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்குப் புகார்களும் போயுள்ளன. ஆனால் அதுகுறித்து ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த சித்திரவதைப் பயிற்சி முகாம்கள் குறித்த புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனக் குழந்தைகளை ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளுக்குத் தயார் படுத்த எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்ற விவரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.
தற்போது அதீத வேகத்தில் நீச்சலடித்து, தங்கம் வென்று அனைவரையும் வியக்க வைத்துள்ள யே எப்படிப்பட்ட சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது தெரியவில்லை.

(தட்ஸ்தமிழ்)

No comments:

Post a Comment